ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்பு மார்ச் மாதத்திலேயே சாத்தியம்..?

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பள உயர்வு மார்ச் மாதத்திலேயே சாத்தியமாகலாம் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ஏ.எல்.முகம்மது முக்தார் தெரிவித்தார்.
 
இது பற்றி அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
 
ஆசிரியர், அதிபர்களின் தொடர்ச்சியான போராட்டங்களையடுத்து நிதி அமைச்சரினால் வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு இம்மாதம் வழங்கப்படும் என நிச்சயமாக கூற முடியாது.
 
ஏனெனில் அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் பல படிமுறைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும். அவை இன்னும் நிறைவுக்கு வந்ததாக அறியக் கிடைக்கவில்லை.
 
குறிப்பாக அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை அமைச்சரவை அங்கீகரித்த பின்னர் சம்பள ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டு, அதன் அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும். அதன் பின்னர் திறைசேரியினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டு நிதி என்பன வழங்கப்பட வேண்டும்.
 
இதன் பின்னர் கல்வி அமைச்சு அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்ற ஆகக் குறைந்தது இரண்டு மாதங்கள் வரை செல்லக்கூடும். இதன் பின்னர் வலயக் கல்வி அலுவலகங்களினால் சுயவிபரக்கோவை அடிப்படையில் சம்பள மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
 
இதன் பிரகாரம் ஆசிரியர், அதிபர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் மார்ச் மாதத்திலேயே கிடைக்கும் சாத்தியம் உள்ளது. அப்போது ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான பாக்கியும் சேர்த்து வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts