கல்முனைக்கு 20ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன!கர்ப்பிணிகள் ,60க்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் என்கிறார் பணிப்பாளர்.

கல்முனைப் பிராந்தியத்திற்கு மேலும் 20ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று வந்தடைந்துள்ளன. அவைகள் அனைத்தும் பிராந்தியத்திலுள்ள 13 சுகாதாரப்பிரிவுகளிலும், விடுபட்ட 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் ஏற்றப்படும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் தெரிவித்தார்.
 
மேலும் 03மாதத்திற்குள்ளான கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அவ்வாறு அன்று செலுத்தப்படாமல் ,இன்று 3மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் மற்றும் இதுவரை ஏற்றாமல் தவறவிடப்பட்ட கர்ப்பிணிகள் அனைவருக்கும் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை, ஏலவே முதலாவது டோஸ் ஏற்றிய கர்ப்பிணிகளுக்கான இரண்டாவது டோஸ்ஸூம்  ஏற்றப்படவிருக்கிறது. வீடு வீடாகச்சென்று இத்தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு இராணுவத்தினரும் ஒத்துழைக்கவிருக்கின்றனர்.
 
13 சுகாதாரப்பரிவுகளில் சம்மாந்துறைக்கு அதிகூடிய 2500தடுப்பூசிகளும் ,ஆலையடிவேம்பு ,திருக்கோவில், நாவிதன்வெளி,இறக்காமம் போன்ற பிரதேசங்களுக்கு குறைந்த 1000தடுப்பூசிகளும் வழங்கப்படவிருக்கின்றன.
 
இது இவ்வாறிருக்க, ஏலவே முதலாவது டோஸ் ஏற்றப்பட்டவர்களுக்கு இதுவரை இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான  தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவில்லையெனவும் ஓரிருவாரத்தில் அவை கிடைத்ததும் விரைவாக ஏற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 

Related posts