இனப்பிரச்சினைக்கு ‘தீர்வைத் தருவேன் ; மஹிந்த ராஜபக்‌ஷ

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வைத் தன்னால் தரமுடியுமெனவும் அதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, தமிழர் பிரதிநிதிகள் தயாராக இருக்கவேண்டுமெனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

தமிழ்ப் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள், செய்திப் பொறுப்பாளர்களை, நேற்று (05) காலை, தனது விஜயராம இல்லத்தில் சந்தித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வைத் தான் வழங்கக் காத்திருந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்கவை மனதில் வைத்துக்கொண்டு, தன்னுடைய பிரதிநிதிகளுடனான பேச்சுகளில் அசமந்தப் போக்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கடைப்பிடித்தமையாலேயே, அது சாத்தியமற்றுப் போனதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

ரணில் விக்கிரமசிங்க, எல்லாவற்றையும் தருவாரென நம்பி ஏமாந்ததைத் தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேறெதுவும் கிடைக்கவில்லை எனவும், அவர் தெரிவித்தார். 
தற்போதும்கூட, காலம் கடந்துவில்லை எனத் தெரிவித்த மஹிந்த, தமிழர் தரப்புகள், தங்களுடன் விட்டுக்கொடுப்போடு பேசுவதற்குத் தயாரென்றால், தீர்வைச் சாத்தியமாக்கிக் காட்டுவேனென்ற உறுதிமொழியையும் வழங்கினார். 

அரசமைப்பு

புதிய அரசமைப்பு உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை எனவும் ஆதங்கப்பட்ட மஹிந்த, கொல்வின் ஆர்.டி சில்வா போன்ற பிரபல சட்ட விற்பன்னர்களால் பொறுமையாகவும் நீண்ட காலமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தி கொண்டுவரப்பட்ட இலங்கையின் அரசமைப்பை, சுமந்திரன், ஜயம்பதி போன்றவர்கள் நினைப்பதுபோல் சடுதியாக மாற்ற முடியாதெனவும் தெரிவித்தார். 

திடமான அரசாங்கம் ஒன்றை உருவாக்கிய பின்னர், நாட்டு மக்களது கருத்துக்கிணங்க, புதிய அரசமைப்பொன்றை உருவாக்க முடியுமெனவும், அதற்கு, தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும், அவர் கூறினார். 

வெளிநாட்டு உறவு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு உறவுகளில், பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நிலைமை இவ்வாறே தொடருமானால், நாடு பாரிய நெருக்கடிக்குள் சிக்குமென எச்சரித்ததோடு, தான் இலங்கையின் பக்கம் சார்ந்தே இருப்பவன் எனவும், எந்தவொரு வெளிநாட்டுடனும் சார்ந்துச் செயற்படாமல் இருப்பதால்தான், தாய்நாட்டுப் பாசம் தனக்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்த மஹிந்த, தாய்நாட்டுக்காக எவருடனும் நெருக்கிப்போகத் தயாரெனவும் கூறினார். 

தேர்தல்

நீண்டகாலமாக ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு, மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறாமலிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்களை நடத்தி, மக்களது உரிமைகளை வென்றுக்கொடுத்த போதிலும், அதனைக் காலாவதியாக்கி அழகு பார்ப்பது நியாயமில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தி, மக்கள் ஆணையைப் பெறுவதற்கு, மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் எனவும் கோரினார். 

தாங்கள் பலசாலிகள் எனக் கூறிக்கொள்பவர்கள், தங்களது பலத்தை மாகாணசபைத் தேர்தல்களில் நிரூபித்துக் கொள்ளட்டும் எனவும் சவால்விட்ட அவர், தம்மைப் பொறுத்தமட்டில், மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதே சிறந்த தீர்வைத் தருமென நம்புவதாகவும் அதையும் தாண்டி எந்தத் தேர்தல் நடந்தாலும், அதை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார். 

ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடுவதென்பது தொடர்பில், பல்வேறுபட்ட கருத்துகள் நிலவுவதை ஏற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ, மக்கள் மனதை வெல்லக்கூடிய ஒருவரே, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் எனவும் கட்டியம் கூறினார். 

தோட்டத் தொழிலாளர் சம்பளம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென, எவரும் தன்னிடம் கோரியதாக நினைவில்லை எனக்கூறிய மஹிந்த, மொத்தச் சம்பளமாக, நாளொன்றுக்கு ஆயிரம் தேவையென்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் கூறினார். 

இருப்பினும், சில பெருந்தோட்டங்களில், ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகத் தான் அறிந்ததாகவும் அது, அடிப்படைச் சம்பளமல்ல எனவும் கூறிய மஹிந்த, இப்பிரச்சினையை, உரியவர்கள் சரியான முறையில் கையாளவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். 

நாட்டின் கடன்

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களால்தான், தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக எழும் குற்றச்சாட்டை மறுத்த எதிர்க்கட்சித் தலைவர், தாங்கள் பெற்ற கடன்களை என்ன செய்தோம் என்பதை, வீதி, கட்டடம் போன்றவற்றினூடாக மக்கள் அவதானிக்க முடிகிறதெனவும் ஆனால், தற்போது எதனையும் வெளிப்படையாகக் காணமுடியவில்லை எனவும் ஆதங்கப்பட்ட மஹிந்த, துரித பொருளாதாரத் திட்டமின்மை காரணமாகவே, இந்த நாடு, பின்னடைவைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார். 

மகாவலி

மகாவலித் திட்டத்தினூடாக, சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றமை தொடர்பான கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்கையில், “நாட்டினுடைய எந்த அபிவிருத்தித் திட்டமானாலும், அத்திட்டத்தினூடாக அனைத்து மக்களும் பயனடைய வேண்டும். அது மகாவலித் திட்டமானாலும் சரி, கல்லோயா திட்டமென்றாலும் ஒன்றுதான்.

தனி இனத்துக்கான திட்டமாக அதனைப் பார்க்க முடியாது. ஆகையால், மகாவலித் திட்டத்தினூடாக சிங்களக் குடியேற்றம் இடம்பெறுகிறது என்றால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி இடம்பெற்றால், அதையண்டியுள்ள ஏனைய மக்களும் தமக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று மேலும் கூறினார்.

Related posts