இலஞ்சம் பெற்றமை தொடர்பில் நுவரெலியா மற்றும் கல்முனை தொழில் ஆணையாளர் காரியாலய அதிகாரிகள் இருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலிய தொழிலாளர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக வருகைதந்த நிலையில், இவர்கள் இருவரும் நானு – ஓயாவைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் பிரசன்ன சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
நுவரெலிய தொழில் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரி 1,000 ரூபாவையும் கல்முனை தொழில் ஆணையாளர் அலுவலக அதிகாரி 8,000 ரூபாவையும் இலஞ்சமாக பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் நுவரெலிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
இதனிடையே, அங்குனுகொலபெலஸ்ஸ மகாவலி அலுவலக முகாமையாளருக்கு 20,000 ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கியமை தொடர்பில் சீனப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் கற்குவாரி செயற்றிட்டமொன்றின் பீ பகுதிக்கான அனுமதிப்பத்திரத்தை நீடிக்குமாறு கோரி குறித்த சீனப் பிரஜையினூடாக இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலஞ்சம் பெறுகின்றமை தொடர்பில் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் பதிவுசெய்த முறைப்பாட்டிற்கமைய சீனப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்