அக்கரைப்பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அடங்கலாக 350 பேருக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு அக்/ பாயிஷா மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக், உறுப்பினர் ஏ.ஜி. பர்ஸாத் உட்பட பலரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர்.
அக்கறைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ. காதர் தலைமையில் பொதுசுகாதார பரிசோதர்களான பௌஸ், ரவூப் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டங்களில் அக்கறைப்பற்று பிரதேச பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டனர். மக்கள் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் காட்டிவரும் ஆர்வம் பாராட்டத்தக்கது என்றும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத ஏனையோர் அடுத்த தடவையில் பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் தவிசாளர் றாஸிக் இதன்போது தெரிவித்தார்.
அக்கறைப்பற்றில் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேலும் பல இடங்களில் இடம்பெற்றன. அந்தவகையில், அக்கறைப்பற்றில் சுகாதார பிரிவினரால் தடுப்பூசி மையங்களாய் அடையாளப்படுத்தப்பட்ட அக்/ ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) , அக்-முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) போன்ற இடங்களிலும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.