நஞ்சற்ற விவசாயத்தால் மாத்திரமே மக்களின் வாழ்வு நீடிக்கும் என்ற உண்மையை உலகம் இன்று உணர்ந்துள்ளது! இன்று ஆளுநர் அம்பாறையில் மத்தியில் உரை!

நஞ்சற்ற விவசாயத்தின் அடிப்படையில்  மாத்திரமே  மக்களின் சுகமான வாழ்வு நீடிக்கும் என்ற உன்னத உண்மையை உலகம் இன்று உணரத்தலைப்பட்டுள்ளது. அதன்விளைவாக இன்றைய நவீனத்துவம் பண்டையகாலத்தை நோக்கிச்செல்லத்தலைப்பட்டுள்ளதைக்காணலாம். அதனை அடியொற்றியே  சேதனப்பசளை பாவிக்கும் யுகத்தை நோக்கி இலங்கையும் பயணிக்கிறது.
 
இவ்வாறு அம்பாறை மாவட்ட உள்ளுராட்சித்தலைவர்கள் செயலாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் தெரிவித்தார்.
 
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்றங்களின் தலைவர்களுக்கான கூட்டம் நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை காலை அம்பாறை ஹார்டி உயர் தொழினுட்பக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட உதவிஉள்ளுராட்சி மன்ற ஆணையாளர் கமல்நெத்மினி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திலக்ராஜபக்ச, வீரசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
 
சேதனைப்பசளைகளை உற்பத்திசெய்யும் திட்டத்தை உள்ளுராட்சிமன்றங்களிடம் ஒப்படைப்பது என்ற முடிவை ஆளுநர் நேற்று உத்தியோகபூர்வமாக உள்ளுராட்சிமன்ற தலைவர்களை சந்தித்து தெரிவிப்பதற்காக இக்கூட்டம் கூட்டப்பட்டது.
 
அங்கு ஆளுநர் மேலும் உரையாற்றியதாவது:
 
விவசாயத்தில் இரசாயனப்பசளைகளை பாவித்ததால் மக்கள் கண்ட துரதிஸ்டமான பலாபலன்களை நாடு அனுபவித்துவருகின்றது. பண்டையகாலத்தில் நம் முன்னோர்கள் பாவித்த சேதனைப்பசளைகளை நாமறிவோம். அதனால் அவர்கள் 100வயதுவரை நோய்நொடியின்றி செல்வச்செழிப்புடன் தேகாரோக்கியத்துடன் சந்தோசமாக வாழ்ந்தார்கள்.
 
ஆனால் இரண்டாவது உலகமகாயுத்தத்திற்கு பின்பு மேற்குலக நாடுகள் கையாண்ட தந்திரோபாயத்தில் மூன்றாம்உலக நாடுகள் சிக்கிக்கொண்டன. அதாவது இரசாயன பசளைகளை பாவித்து விவசாயத்தை செய்ய நிர்ப்பந்தித்தது. அந்த திணிப்பிற்கு  பல்தேசியக்கம்பனிகளின் ஆதரவும் கிடைத்தது.
 
அதனால் இன்று உலகப்பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக உணவுப்பாதுகாப்பு மாறியுள்ளது.பசுமைப்புரட்சி என்றபோர்வையில் விவசாயிகள் இரசாயனப்பசளைகளை பாவிக்க ஊக்குவிக்கப்பட்டார்கள்.
 
யுத்தத்தால் ஏற்பட்ட காலநிலை மாற்றமே இத்தகைய திணிப்பிற்கு வழிகோலியது. இரசாயனமின்றி விவசாயம் செய்யமுடியாதென்ற நிலைக்கு இட்டுச்சென்றது. விளைவாக மக்கள் நோய்வாய்ப்பட்டனர். புற்றுநோய் சிறுநீரகநோய் அதிகரித்தன. மக்களின் வாழ்க்கைக்காலம் சுருங்கியது.
 
நிலையான விவசாயத்தை மேற்கொள்வதானால் நாம் இரசாயனப்பசளைகளற்ற சேதனப்பசளை யுகத்திற்கு செல்லவேண்டும். அதாவது பண்டைய யுகத்திற்கு செல்லவேண்டும்.இருபோகங்களிடையே பல்லினப்பயிர்ச்செய்கை செய்து எமது உற்பத்தியை அதிகரிக்கவேண்டும்.
 
அதிஸ்டவசமாக உலகின் ஏனைய நாடுகளில் இல்லாத வளம் சுபீட்சம் எமது இலங்கையில் உள்ளன. எனவே நாம் அவற்றை தாராளமாகப்பயன்படுத்தி சேதனைப்பசளைகளை உற்பத்தி செய்து எமது விவசாயத்தை வளம்படுத்தவேண்டும். அதனூடாக நோய்நொடியற்ற தேகாரோக்கியமான சமுதாயமொன்றை உருவாக்கவேண்டும்.
 
அதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் தமது பூரண ஒத்துழைப்பை இத்திட்டத்திற்கு வழங்கவேண்டும். என்றார்.

Related posts