வருகின்றவர்களை வரவேற்பதென்பது தமிழர்களின் பண்பியலாகும். அதே போன்றுதான் புத்தாண்டுகளை வரவேற்பதும் வாழ்த்துக் கூறுவதும் எமது பண்பாட்டுப் பரிமாணத்தில் ஒன்றாகும்.
அந்த வகையில், 2020 புத்தாண்டினை வரவேற்பதுடன், எமது மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எதிர்பார்ப்புகளுடன் எத்தனையோ ஆண்டுகளை வரவேற்றிருக்கின்றோம். வாழ்த்துக்களையும் கூறியிருக்கின்றோம்.ஆண்டுகள் பல வந்தாலும் எமது மக்களுக்கு கூறத்தக்க ஆறுதலோ அமைதியோ கிடைக்கவில்லை.
நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகவும், சமத்துவமாகவும் வழி நடத்தக்கூடிய தலைமைகளை எமது மக்கள்எதிர்பார்த்து நிற்கின்றார்கள். புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையைத் தீர்க்கவல்ல தலைமைகளை எமது மக்கள்வேண்டி நிற்கின்றார்கள். மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைதிகளின் விடுதலை, காணிக்கையகப்படுத்துகை,அபிவிருத்தி , தொழில்வாய்ப்பு என்று பல பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்பார்த்து ஏக்கத்துடன் எமது மக்கள்உள்ளார்கள்.
இவற்றுக்கான தீர்வுகளை அளிப்பதற்கான ஆளுமை, நாட்டு தலைமைக்குக் கிடைக்க வேண்டுமென எமது மக்கள்எதிர்பார்க்கின்றார்கள். புத்தாண்டு பிறப்பின் பின்னராவது எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானவழிவகைகள் கிடைக்கட்டும்.
“சமத்துவமின்மையே புரட்சிக்குக் காரணம்” என்பது அரிஸ்ரோட்டிலின் கருத்தாகும்.சமத்துவம் கிடைக்கவும், பிரச்சினைகள் தீரவும் வழி கிடைக்கட்டும்.இறுதியாக, புத்தாண்டே வருவாய் எமது மக்களுக்குப் புதுப் பொலிவு தருவாய்.