இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய செல்வம் கல்விச் செல்வம் மாத்திரமே-பாராளுமன்ற உறுப்பினர் நசீர்

எம் எல்லோராலும் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய செல்வமாக கல்விச் செல்வம் உள்ளது. அச்செல்வத்தினை யார் முறையாகப் பெற்றுக் கொள்கின்றாரோ அவர் வாழ்வில் உயர் நிலையினை அடைந்து மற்றவர்களுக்கும் பல்வேறு பட்ட உதவிகளை புரிய முடியும் என அம்பாறை மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.
 
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில்இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எம்.நிசார் தலைமையில் அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், இன்றைய இளம் சமுதாயத்தினரின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வி கற்பதன் மூலம்தான் ஒருவர் ஒழுங்க நெறியுடன் கூடிய முன்னேற்றத்தினை அடைந்து கொள்ள முடியும். 
 
கல்வியினை முறையாகக் கற்றுக் கொண்டு அதன்பால் நாம் செயற்படுகின்றபோது பண்பானவர்களாகவும், பிறரை மதிக்கக் கூடியவர்களாகவும், மற்றர்களுக்கு அன்பு செலுத்தக் கூடியவர்களாகவும், பிறர் மீது கௌரவம் செலுத்துபவர்களாகவும் நாம் ஒவ்வொருவரும் மாற்றமடைய முடியும். சிறந்த முறையில் கல்வி கற்பவர்கள் வாழ்;வில் நிலை அடைந்து விடுவர். அவ்வாறு உயர் நிலை அடைபவர்கள் அவர் சார்ந்த சமூகத்திற்கும் மக்களுக்கும் நன்மையான விடயங்களைப் புரிவதற்கான பல சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஏற்படும்.
 
தமது ஒவ்வொரு பிள்ளையினையும் கற்பிக்க வேண்டி ஒவ்வொரு பெற்றோர்களும் படும் அவஸ்தைகளை அப்பிள்ளைகள் நன்குணர்வார்களேயானால் ஒருபோதும் அப்பிள்ளைகள் தீய பாதையில் செல்ல மாட்டார்கள். தமது குறிக்கோளின் பக்கம் நின்று மட்டுமே செயற்படுவார்கள். 
 
வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பலர்தான் இவ்வுலகில் பல்வேறு உயர்நிலை அடைந்து சாதனையாளர்களாக எம்மத்தியில் வலம் வந்திருக்கின்றார்கள் என்பதை இள வயதினர் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. கல்வியினைக் கற்பதற்கு வறுமை ஒரு தடையல்ல. தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி ஒவ்வொரு பிள்ளையும் வாழ்வில் முன்னேற வழி ஏற்படுத்த வேண்டும். நமக்காக கிடைக்கின் ஒவ்வொரு உதவிகளையும் நாம் பெரும் மனதோடு ஏற்று அதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
 
கல்வி பயில்கின்ற ஒவ்வவொரு மாணவனும் தமகு எதிர்கால இலட்சியத்தினை மனதிற் கொண்டு சதா செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுமிடத்து நிச்சயம் ஒவ்வெருவரினதும் இலட்சியம் நிச்சயம் நிறைவடையும் என்றார்.
 
இந்நிகழ்வின்போது கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் எம்.எம்.அப்துல்லாஹ், மூதூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி உள்ளிட்ட கல்வியியலாளர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.ஜஃபர் இந்நிகழ்வின் பிரதான பேச்சாளராக கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரையாற்றினார்.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட சுமார் இருநூற்றுக்கும் அதிகமான வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts