தமிழர்களின் பண்பாடு தாயைப் போற்றுவதாகவும் இன்னுமொருவரின் தாயை விமர்சிப்போரின் நாகரிகங்களை மக்கள் விளங்கிக்கொள்வார்கள் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “எனது கை சுத்தமானது. நான் யாரையும் கடத்தவும் இல்லை கொலைசெய்யவும் இல்லை. எனது கை இரத்தம் படிந்த கையில்லை என்பதை என்னை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் தமிழரசுக் கட்சியில் இணைந்த காலம் தொடக்கம் என்மீது சிலர் தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனது தாய் தொடர்பிலும் விமர்சனங்களை சிலர் முன்வைக்கின்றனர்.
எனது தாயார் இலங்கை தமிழரே. ஆனால் சிலர் அவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் என பொய்யான விமர்சனங்களை செய்துவருகின்றனர். உண்மையில் தமிழர்களின் பண்பாடு தாயினைப் போற்றுவதாகும். இந்நிலையில் இவ்வாறு விமர்சிக்கின்றவர்களின் நாகரிகத்தினை மக்கள் விளங்கிக்கொள்வார்கள்
இதேவேளை, நான் வெற்றிபெற்றால் கட்சி மாறுவேன் என சிலர் தெரிவித்துவருகின்றனர். ஆனால் எந்தக் கட்சிக்கும் மாறவேண்டிய தேவைப்பாடு எனக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.