சேதனப் பசளையை ஊக்குவிப்போம்… சேதனப் பசளை உற்பத்தியில் விவசாயிகளை ஈடுபடுத்துவோம்… உள்ளூர் விதைகளுக்கான கொள்கையை அறிமுகப்படுத்துவோம்…. – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

சேதனப் பசளை பாவனையை ஊக்குவித்து சேதனப் பசளை உற்பத்தியில் விவசாயிகளை ஈடுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
விதை மற்றும் தாவரக் கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு உள்நாட்டு விதைகளுக்கான கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இன்று (2020.07.26) நுவரெலியா சினிசிட்டா மணடபத்தில் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
பல்கலைக்கழகங்களின் விவசாய பீடம், அரச விவசாய ஆராய்ச்சி நிலையம், விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
 
நுவரெலியா விவசாய பெருமக்களின் பிரதான கோரிக்கையான மரக்கறிகளை களஞ்சியப்படுத்தும் வசதி கொண்ட களஞ்சிய வளாகமொன்றை உருவாக்கி மேலதிக மரக்கறி உற்பத்திகளை முகாமைத்துவம் செய்வது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பொறுப்பாக கருதப்படுகின்றது.
 
நாட்டின் மொத்த மரக்கறி தேவையின் 35 வீதமானவற்றை உற்பத்தி செய்யும் நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரை 80 வீதமான விவசாய உர மானியம் அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவசாயத்துறையை ஊக்குவிக்கும் திட்டம் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
 
குறித்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.  

Related posts