கல்முனையில் இனவாதமுனைப்பு தேர்தல் சுவரொட்டிகள!. இனவாதத்தை தவிருங்கள்:சமாதான ஆர்வலர்கள் கவலை!

அண்மைக்காலமாக கல்முனைப்பிராந்தியத்தில் அரசியல் மேடைகளில் ஏட்டிக்குப்போட்டியாக இனவாதக்கருத்துக்களை சில அரசியல்வாதிகள் வெளியிட்டுவருகிறார்கள்.
 
மேலும் அப்படியான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுவருகின்றன. இவைகள் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக கவர்ச்சியை ஏற்படுத்திவருவதையும் மறுப்பதற்கில்லை.
 
கல்முனையை கருணா காப்பாற்றுவார் என்றும் கல்முனையை கருணாவிடமிருந்து காப்பாற்ற ஹரீசை ஆதரியுங்கள் என்றும் ஞானசாரதேரர் கல்முனைக்கு படையெடுப்பேன் என்றும் அவரிடமிருந்து காப்பாற்ற ஹரீசுக்கு வாக்களிக்கவேண்டும் என்றெல்லாம் இப்போஸ்டர்கள் சொல்கின்றன.
 
தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் அவர்கள் இத்தகைய இனவாத நச்சுவிதைகளை விதைக்கிறார்கள் என்பதனை புத்திஜீவிகள் அறிவார்கள். இது சாதாரண மக்களுக்கு விளங்காது. இதுவே இனமுறுகலுக்கும் வன்முறைக்கும் வித்திடுமளவிற்கு சிலர் தீயாக செயற்பட்டுவருகின்றனர்.
 
இந்த நிலைமையை சமாதான ஆர்வலர்கள் கவலையுடன் எதிர்நோக்குகிறார்கள்.
யாராக இருந்தாலும் தங்கள் தங்கள் விஞ்ஞாபனத்தை வைத்து வாக்குக்கேளுங்கள். மாறாக இனவாத கருத்துக்களை மக்களிடம்  பகிரங்கமாக  தெரிவிக்காதீர்கள். மேலும் இனவாத போஸ்டர்களையும் தவிருங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
சமுகவலைத்தளங்கள் இவ்வகையான செயற்பாடுகளுக்கு தீனிபோடலாம். சுதந்திரமாக கருத்துத்தெரிவிக்கின்றோம் என்பதற்காக சமுககங்களிடையே பகைமையை மூட்டிவிடுதல் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts