கல்முனை பிராந்தியத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா;மரண எண்ணிக்கை 131 ஆக உயர்வு

கல்முனைப் பிராந்தியத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை மூவர் உயிரிழந்திருப்பதுடன் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்திருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
 
 திங்கட்கிழமை (23) முற்பகல் 10.00 மணி வரையான 24 மணித்தியாலயத்தில் 105 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
 
இவர்களுள் ஆகக்கூடிய தொற்றாளர்கள் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து 17 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அத்துடன் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 16 பேரும் சம்மாந்துறை பிரதேசத்தில் 15 பேரும் சாய்ந்தமருது பிரதேசத்தில் 13 பேரும் இக்காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
 
இதன்படி கல்முனை பிராந்தியத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5819 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் தற்போது 1142 பேர் வைத்தியசாலைகளிலும் கொவிட் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 4014 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்-
 
அத்துடன் மேற்படி காலப்பகுதியில் கொரோனா தொற்று காரணமாக மூவர் உயிரிழந்திருக்கின்றனர்.
 
கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 50 வயது ஆண் ஒருவரும் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 52 வயது மற்றும் 74 வயதுதுடைய ஆண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
 
இதன்படி கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது- என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.
 
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை  34525 ஆக அதிகரித்துள்ளதுடன் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

Related posts