கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முற்பட்ட நபர் ஒருவரை கையும் மெய்யுமாகப் பிடித்த பொதுமக்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக ஆலய தலைவர் க.சிவலிங்கம் தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்று(23) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. கல்முனை தமிழ் மக்களின் இருப்பை பறைசாற்றும் வகையில் பிராதன வீதியின் எல்லையில் ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தினை கடந்த காலங்களில் திட்டமிட்ட வகையில் அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் அவை எதுவும் சாத்தியமாகவில்லை.
இதற்க்கு முன்னரும் இவ் ஆலயத்தின் உண்டியல் பல தடவைகள் உடைத்து சேதமாக்கப்ட்டிருந்ததுடன் பணமும் திருடப்பட்டிருந்தது. இந் நிலையில் புதன்கிழமை காலை ஆலத்திற்குள் நுழைந்த திருடன் உண்டியலை உடைத்துள்ளான். அவ்வேளையில் ஆலயத்தின் பின்புறம் வேலையில் ஈடுபட்டிருந்த குருக்களும், காவலாளியும் சத்தம் கேட்பதை அறிந்து ஓடிவந்து பார்க்கும் போது குறித்த திருடன் உண்டியலை உடைத்து பணத்தினை அள்ளி எடுத்துள்ளான்.
இவர்களைக் கண்டதும் ஓட்டம் எடுத்துள்ளான். பொது மக்களின் உதவியுடன் மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.