த.தே.கூட்டமைப்பு என்று கூறிக்கொண்டு யாரும் வரவேண்டாம்!

எமது அடிப்படைக்கோரிக்கையான தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலைச் செய்யாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரோ யாரோ எமது பகுதிக்குள்வரவும் வேண்டாம்.கூட்டம் நடாத்தவும் வேண்டாம். உங்களது கதைகளைக் கேட்கவும் தயாரில்லை.

இவ்வாறு கல்முனை 12ஆம் வட்டார மக்களுடனான சந்திப்பின்போது கலந்துகொண்ட மக்கள் ஆக்ரோசமாகத் தெரிவித்துவிட்டு வெளியேறினர். அதனால் கூட்டம் நடாத்த முடியாமல் இடைநடுவில் கலைந்தது. செயற்குழுவோ உபகுழுக்களோ தெரிவுசெய்யப்படவுமில்லை.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம்  (21) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்  கல்முனை 12ஆம்வட்டாரமக்களுடனான சந்திப்பொன்றை நடாத்துவதற்கும் செயற்குழு மற்றும் உபகுழுக்களை அமைப்பதற்குமாக  அழைத்திருந்தார்.

கூடவே சக மாநகரசபை உறுப்பினர்களான ஹென்றிமகேந்திரன் வி.சிவலிங்கம்  ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.

தேர்தலுக்குப்பின்னரான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தைக்கூட்டிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்  விளக்கமாக விபரித்துக்கொண்டிருக்கையில் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

ராஜன் பேசுகையில்: கல்முனை மாநகரசபைக்கான சகலவளங்களும் தமிழ்ப்பிரதேசத்தில்தானுள்ளன. ஆனால் வளமுள்ள பிரதேசத்தை புறக்கணித்துவிட்டு முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது ஏனென்று மேயரிடம் கேட்டதற்கு உங்களது எம்.பிதான் அதைச்செய்யவேண்டும் என்றுபதிலளித்தார். அப்படியென்றால் மேயர் அமைச்சர் எலலாம் ஒரு இனத்திற்கு மட்டும்தானா? என்றுகேட்டேன். என்றார்.

அந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களுடன்தானா கூட்டுவைத்துள்ளீர்கள் ? என்றுகேட்டு மக்கள் குழப்ப ஆரம்பித்தனர்.

அங்கு மக்கள் ஒரேகுரலில் கூறியதாவது:

தேர்தல் பிரசாரத்திற்கு கல்முனைக்குவந்த எமது சம்பந்தர் ஜயா தேர்தல் முடிந்து 10நாட்களுள் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். இன்று 3மாதமாகின்றது. ஒன்றையும் காணோம்.

இலங்கையில் பிரதமருக்கு சமானமான அதிகாரத்துடனான பதவியைக் கொண்டிருக்கின்ற சம்பந்தர் ஜயா இதைக்கூடச் செய்யவில்லையென்றால் எமக்கு இந்தக்கட்சி எதற்காக? இவரது காலத்தில் இதைனைச் செய்யவில்லையென்றால் பிறகு எப்போது செய்வது?

இதுவரை சம்பந்தர் ஜயா இந்தக்கல்முனைக்குச் செய்தது என்ன? அம்பாறை மாவட்டத் தமிழருக்குச் செய்த அபிவிருத்திதான் என்ன? எம்மைப் பொறுத்தவரையில் எம்பியுமில்லை மாகாணசபை உறுப்பினருமில்லை. மாநகரசபை உறுப்பினர்களாகவுள்ள 7உறுப்பினர்களை மாத்திரமே நம்பியுள்ளோம். நீங்கள் எந்தவழியிலாவது சென்று எமது  அடிப்படைக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.

இதைவிடுத்து வேறெந்தக்கதையையும் அளக்கவேண்டாம். நாம் ஏமாந்து கொண்டிருக்கின்றோம். வடக்கிற்கு ஒரு நீதி கிழக்கிற்கு அதுவும் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு நீதியா?

இந்தப்பாணியில் நின்றால் சாய்ந்தமருது சகோதரர்கள் போல சுயேச்சையில் நின்று செய்றபட வேண்டிவரும்.
த.தே.கூட்டமைப்பினராகிய நீங்கள் இன நல்லுறவு என்ற போர்வையில் கிழக்கை தாரைவார்த்தீர்கள். சகலவற்றுக்கும் முஸ்லிம்காங்கிரசுக்கு ஒத்துழைக்கிறீர்கள். முஸ்லிம் களுக்காக சம்பந்தர் ஜயா 100வீதம் ஒத்துழைக்கிறார்.

ஆனால் கேவலம் எமக்கான தமிழ்பிரதேச செயலகவிடயத்தில் முட்டுக்கட்டையாக உள்ளனர்.  இதனைச் செய்வதால் அவர்களுக்கு என்ன குறை? என்ன நட்டம்? நாம் ஒன்றும் புதிதாகக்கேட்கவில்லையே. இருக்கின்ற எமக்கான செயலகத்தை அதிகாரபூர்வமாக மாற்றவே கோருகின்றோம். இதனால் முஸ்லிம்களுக்கு என்ன பாதிப்புவரப்போகின்றது?

அப்படிப்பட்டவர்களுடன் கூட்டுச்சேர்வது எதற்காக? நாம்இனியும் ஏமாறத்தயாரில்லை. என்றனர். அதன்பிறகு கூட்டம் எவ்வித முடிவும் எடுக்காமல் கலைந்துசென்றது.

Related posts