எமது அலுவலகம் இடைக்கால அறிக்கையொன்றினை தற்போது சமர்பிக்க முன்வந்துள்ளது. அந்தவகையில், 5 ஆம் திகதி ஜனாதிபதியிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில், காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதனை ஏற்றுக்கொண்டு காணாமற்போனோருக்கான நினைவுத்தூபியொன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு கொழும்பில் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலில் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அதன் பலனாக ஐ.நா சபையினால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
காணாமல் போனோருக்கான சர்வதேச தினம் இன்று இலங்கையிலும் அனுட்டிக்கப்படடுள்ளது. இதனால், இந்த நாட்டிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளனர் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, நாடாளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமையினால். இலங்கை அரசாங்கமும் அதனை ஏற்றுக்கொண்டு, காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாகவே அறிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்படுதல் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணி வகிக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய வேதனையை நாமும் அறிவோம். அவர்களின் வாழ்வாதரப் பிரச்சினைகள் குறித்தும் நாம் அறிவோம்.நான்கு தசாப்தங்களாக இலங்கையில் காணாமல் ஆக்கப்படுத்தல் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொள்வதால் மாத்திரமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். துரதிஷ்டவசமாக அதனை ஏற்காதவர்களும் நாட்டில் உள்ளனர்.
குறிப்பாக திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் மூவினத்தை சேர்ந்தவர்களினதும் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அரச தரப்புக்களினாலும் மற்றைய சில குழுக்களினாலும் காணாமல் ஆக்கப்படுதல் செயற்பாடுகள் நிகழந்துள்ளன என்பதே உண்மையாகும். இவ்வாறான, நிலையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளமை ஒரு மைல் கல்லாகும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. எமது அலுவலகம் இடைக்கால அறிக்கையொன்றினை தற்போது சமர்பிக்க முன்வந்துள்ளது. அந்தவகையில், 5 ஆம் திகதி ஜனாதிபதியிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்றே நாம் நம்புகிறோம். எமது இந்த அறிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நிவாரணங்களை வழங்குதல், அவர்களின் உறவுகள் பற்றிய விசாரணைகள் இடம்பெறும் காலப்பகுத்தியில் அவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு வழங்குதல் போன்றவற்றை நாம் பரிந்துரைத்துள்ளோம்.
மேலும், காணாமல் ஆக்கப்படுதலை ஏற்றுகொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க வேண்டும் என்ற பரிந்துரைகளும் இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளோம்.
ஆனால், மேற்படி காரணங்களினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மையை அறிவதற்கு உள்ள உரிமை மறுக்கப்படகூடாது என்பமையும் ஆழமாக வலியுறுத்தியுள்ளோம். எவ்வாறாயினும், காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பிலான சர்வதேச பரிந்துரைகளையும் பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.