கிழக்குமாகாண கல்விக்கண்காணிப்புகுழுவினர் அதிரடிப்பாய்ச்சல்!

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் மாகாணமட்ட கண்காணிப்புக்குழுவினர் தமது ஆளுகைக்குட்பட்ட வலயக்கல்விக்காரியாலயங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு முன்னறிவித்தலின்றி திடீர் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதுவரை மாகாணத்திலுள்ள 17கல்வி வலயங்களில் 05வலயங்கள் இத்திடீர் விஜயத்திற்குள்ளாகி பரிசீலீக்கப்பட்டுள்ளன. மேலும் 11தேசிய பாடசாலைகளுக்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
கல்விவலயங்களுக்கான திடீர் சோதனை என்பது கொரோனா காலகட்டத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
அந்தவகையில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தலைமையிலான குழுவினர்  சம்மாந்துறை வலயக்கல்விக்காரியாலயத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டனர்.
 
அங்கு நிருவாகப்பகுதி நிதிப்பகுதி மற்றும் கல்விஅபிவிருத்திப்பகுதி என்பன  ஆராயப்பட்டு சாதக பாதக விடயங்களை பட்டியல்படுத்தினர்.
 
கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான ஆராயும் அமர்வை மாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூர் நடாத்தினார்.
 
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் சமுகத்தில் பாடரீதியாக ஆராயப்பட்டது. பெறுபேற்றினடிப்படையில் ஆராயப்பட்டு முன்னேற்றம் பற்றி விலாவாரியாக பணிப்பாளர் மன்சூர் கேட்டறிந்தார்.
 
அது பற்றி அவர் கூறுகையில் சமகாலத்தில் ‘சம்மாந்துறை வலய கல்வி அபிவிருத்தி திருப்தியாக உள்ளது. பாடரீதியாக நல்லமுன்னேற்றம் காணப்படுகிறது. அதேவேளை விஞ்ஞானம் தமிழ் போன்ற முக்கிய பாடங்களில் அணுகுமுறைகள் சற்று மாற்றியமைக்கப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.’ என்றார்.
 
நிருவாகப்பகுதியில் ஓய்வூதியம் சம்பளபடியேற்றம் தொடக்கம் பல விடயங்கள் ஆராயப்பட்டன. இவற்றின் பெறுபேறுகள் திங்களன்று திருமலையில் ஆராயப்படும் என்று மேலும் சொன்னார்.

Related posts