விரைவில் களுவாஞ்குடி ஆதாரவைத்தியசாலைக்கு சட்டவைத்திய அதிகாரியை நியமியுங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வசதிகளையும் கொண்டு இயங்கி வரும் வைத்தியசாலைகளில் ஒன்றான களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் ஒரு சட்டவைத்தியர் இல்லாதமையால் பல கஷ்ரங்களையும் துயரங்களையும் படுவான்கரை மக்கள் நீண்டகாலங்களாக எதிர்கொண்டு  வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
அண்மைக்காலமாக படுவான்,எழுவான்கரை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற திடீர் மரணங்கள் தற்கொலை மரணங்கள் மற்றும் விபத்து மரணங்களில் இடம்பெறும் அவர்களின் உடல்களை சட்டரீதியாக உடற்கூற்று பிரிசோதனை செய்வதற்கான சட்டவைத்திய அதிகாரிகள் இல்லாதமையால் அவர்களிள் உடல்களை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு தாமதித்தே கொண்டு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு மரணமானவர்களின் உறவினர்கள் எதிகொண்டு வருகின்றனர்.
 
சில வேளைகளில் அவர்களின் உடல்கள் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக மாற்றவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
 
இதனால் உறவினர்கள் அவர்களின் உடல்களை எடுத்துச்செல்வதற்கு அதிகமான பணத்தினை செலவு செய்யவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அத்தோடு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் கடமையில் இருக்கும் சட்டவைத்திய அதிகாரிகள் விடுமுறையில் சென்றால் அவர்களின் உடல்களை இரண்டு மூன்று நாட்களுக்கு பின்னர்  உடல்களை உறவினர்களிடம் கையளிக்கப்படவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. இதனால் மரணமானவர்களின் உடல்களை அவர்களின் சமயமுறைப்படி உரிய நேரத்திற்கு அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது.ஆனால் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் மரணமானவர்களின உடல்களை பாதுகாப்பாக வைத்து உடற்கூற்று பரிசோதனை செய்யக்கூடிய அனைத்து வசதிகளும் இருந்தும் அங்கு ஒரு சட்டவைத்திய அதிகாரி இல்லாத நிலைமையில் இந்த வைத்தியசாலை காணப்படுவதாக பிரதேச வாசிகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
இவ்விடயம் பற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல அரசியல் வாதிகளின் கவனத்திற்கு பிரதேச மக்கள் கொண்டு வந்தும் இதுவரையில் எவரும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காதிருப்பது கவலையளிப்பதாக பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
அவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் பொய்யான வாக்குறுதிகளை மட்டும் தங்கள் வீடுகளுக்கு வந்து கூறிச்செல்வதாகவும் விரைவில் உரிய அதிகாரிகள் இந்த வைத்தியசாலைக்கு ஒரு சட்டவைத்திய அதிகாரியை நியமித்து தரவேண்டும் என்று பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts