அபின்,கொக்கைன் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும், அவற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
அதன் நிறைவு விழாவும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் வெள்ளிக்கிழமை(12)மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பல்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும்,சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும், வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரையில் மக்களுக்கு அதிகளவிலான சேவையையும் நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் கடந்த மாதம் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும், உள்ளடக்கி பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.இதேநேரம் “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் ஜனாதியினால் மட்டக்களப்பு நகரத்தில் ஜனாதிபதியினால் திறந்துவைக்க்பட்டது.
இங்கு தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றுகையில்:-
நாட்டுக்காக ஒன்றிணைவோம் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் முகமாகவே ஆரம்பிக்கப்பட்டது.நாட்டினை முன்னேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டும்.அரசியல் கட்சிகள் பேதமென்றி,இனமதபேதமின்றி அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றிணையவேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தினை நாங்கள் புத்தளத்தில் முதன்முதலில் ஆரம்பித்தோம்.இதன்கீழ் புத்தளத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்னும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நான் இந்த திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் விசேட தன்மைகள் காணப்படுகின்றன.புத்தளம்,மட்டக்களப்பு மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.இதேபோன்று திருகோணமலை மாவட்டத்திற்கும் விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இந்த மாவட்டங்களின் அபிவிருத்திகளில் பாரிய குறைபாடுகள் உள்ளன.இந்த மாவட்டங்களில் அபிவிருத்திகளை செய்வதற்கு அமைச்சரவை அந்தஸ்துபெற்ற அமைச்சர்கள் இல்லை.அதனால்தான் அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்படுகின்றது.ஒதுக்கப்படும் பணம் மீண்டும் திருப்பியனுப்பப்படுகின்றது.
இந்தவேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர்கள்,ஆளுனர்கள் கிராமம்கிராமமாக சென்றனர்.
இதன்போது 842க்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.அபிவிருத்தி பாதைகள் செய்வது கட்டிடங்கள் கட்டுவது மட்டுமல்ல.கிராமசக்தி வேலைத்திட்டம் ஊடாக இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
போதைப்பொருள் தடுப்பு திட்டம் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம்.போதைப்பொருட்கள் சட்ட விரோதமான முறையில் இடம்பெறுகின்றன.கொக்கைன் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.
இது தொடர்பில் முப்படையினர் உட்பட சகல பாதுகாப்பு பிரிவினரும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு மக்களின் உதவி இந்த நாட்டுக்கு தேவைப்படுகின்றது.
சிறுநீரக நோய் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியது.சிறுநீரக நோயினை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பெருமளவான நிதியை செலவிட்டுவருகின்றோம்.பொலநறுவையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் பாரிய சிறுநீரக வைத்தியசாலையினை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நான் இன்று காலை சுமாட் ஸ்ரீலங்கா அலுவலகத்தினை இங்கு திறந்துவைத்தேன்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் பெருமளவில் உள்ளனர்.அவர்களுக்கு தொழில்வாய்ப்பிற்கான வழிகாட்டல் அலுவலகமாக அது செயற்படவுள்ளது.
பிள்ளைகளை பாதுகாப்போம் என்று நிகழ்ச்சி திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.நாட்டில் உள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
போதைப்பொருள்போன்று மிக மோசமான செயற்பாடுகளினால் பிள்ளைகள் பாதிக்கப்படும் நிலையுள்ளது.பிள்ளைகளுக்கு பலவிதமான கஸ்டங்கள் ஏற்படுகின்றன.பொலிஸார்,கல்வித்திணைக்களம்,சுகாதாரதிணைக்களங்கள் உட்பட பலர் இந்த பிள்ளைகளை பாதுகாக்கும் பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.
நாங்கள் பாதைகளை சீரமைத்து அதனை செப்பனிட்டுபோகும்போது எந்த பாதைக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்பதை அடையாளப்படுத்தியுள்ளோம்.இந்தவேலைத்திட்டங்களுக்கு அனைவரது ஒத்துழைப்பினையும் கோரி நிற்கின்றோம்.
சிங்கள-தமிழ் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 48மணி நேரம் இருக்கும் நிலையிலேயே மட்டக்களப்பில் உங்களை நான் சந்திக்கின்றேன்.சிங்கள-தமிழ் மக்கள் இந்த புத்தாண்டை மிக விமர்சையாக கொண்டாடிவருகின்றனர்.இந்தவேளையில் முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைந்துகொள்கின்றனர்.
இன்று உங்களுக்கு பரிசொன்றை வழங்கப்போகின்றேன்.தமிழ் சிங்கள் புத்தாண்டில் ஒரு மரத்தினை நாங்கள் நடவேண்டும்.அதற்கான நேரத்தினை நாங்கள் தீர்மானிக்கவேண்டும்.ஒரு மரத்தினை நடுவதற்கான நல்ல நேரம் இலகுவில் வருவதில்லை.
இந்த நாட்டில்வாழும் அனைத்து மக்களிடமும் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.அந்த நல்ல நேரத்தில் ஒரு மரக்கன்றை நடுங்கள்.சுற்றாடலின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும்.
இங்கு வந்துள்ளவர்களுக்கு 5000 தென்னங்கன்றுகளை வழங்கவுள்ளோம்.முந்திரிகை மரங்கள் 5000வழங்கியுள்ளோம்.நல்ல நேரத்தில் இந்த மரங்கள் நடப்படவேண்டும்.
இந்த நாட்டில் பெரும் வறட்சி நிலவுகின்றது.இந்தநேரத்தில் நாங்கள் சாதனையொன்றை படைத்துள்ளோம்.இலங்கையின் வரலாற்றில் 2018,2019 காலப்பகுதிலேயே அதிகளவான நெல் விளைச்சல் பெறப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவான விவசாயிகள் உள்ளனர்.அவர்களுக்கு இந்த நாளில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மன்னர் காலம் தொடக்கம் இன்றுதான் அதிகளவான விளைச்சல்கள் பெறமுடிந்துள்ளது.இது அரசாங்கத்தின் கைங்கரியம் அல்ல.ஆண்டவனினதும் இயற்கையின் ஆசிர்வாதத்தினாலும் நல்ல மழை கிடைத்தது,குளங்கள் நிரம்பி வழிந்தன,நீரோடைகளில் நீர் நன்றாக ஓடியது.மூன்று வருடங்கள் தொடர்ச்சியான வறட்சி இருந்தது.பின்னர் பெய்த மழையினை பயன்படுத்தி விவசாயிகள் நல்ல விளைச்சலைப்பெற்றுக்கொண்டனர்.
சிலர் இது அரசாங்கத்தின் வேலையென்று சொல்கின்றனர்.அவ்வாறு இல்லை.இது இயற்கையின் அற்புதமாகும்.விவசாயிகளின் கண்ணீர்,வியர்வையினைக்கொண்டே அவர்கள் இந்தளவு விளைச்சலைப்பெற்றுக்கொண்டனர்.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டினை கட்டியெழுப்ப ஒன்றிணையவேண்டும்.வடகிழக்கு அபிவிருத்தி செயலணியை ஆரம்பித்து வடகிழக்கில் எவ்வாறான நடவடிக்கைகளை செய்துவருகின்றேன் என்பது இந்த மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும்.
மாதம் ஒரு முறை நாங்கள் சந்திக்கின்றோம்.வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதில் பங்குபற்றுகின்றனர்.இதன் ஊடாக பாரிய வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம்.நாங்கள் மிகவும் கஸ்டங்களுடன் வேலைகளை செய்கின்றோம்.
எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் என்ற ரீதியில் அபிவிருத்திக்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்வோம்.