ஆசிரியர்களின் வரவினை உறுதிப்படுத்துவதற்கு வடகிழக்கில் பொருத்தப்பட்டுள்ள கைவிரல் அடையாளப் பதிவை தளர்த்தி ஆசிரியர்களின் உயிரைப் பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டிய தேவை உள்ளது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
பாடசாலைகளில் கைவிரல் அடையாளம் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கைவிரல் அடையாளப் பதிவைச் செய்து அலுவலகக் கடைமைகளை ஆரம்பிப்பது நிருவாகிகளினால் மிகச் சிறந்த முறையாக கருதப்படுகின்றது.
இதனால் எல்லோரும் உரிய நேரத்திற்கு வேலைக்கு சமூகமளிக்கக்கூடிய ஒரு ஒழுங்குமுறையை இது ஏற்படுத்தகின்றது. இம் முறை வெளிநாடுகளின் கடைப்பிடிக்கப் பட்டாலும் இலங்கை போன்ற நாடுகளில் பயன் படுத்துவதில் பெரும் பிரச்சினைகள் உருவாகின்றன. மேலைத் தேய நாடுகளில் பாடசாலைகளும், அலுவலகங்களும் ஒரே நேரத்தில் கடமைகளை ஆரம்பிப்பதால் அங்கு ஒரு ஒழுங்கு முறையை விரல் அடையாளப் பதிவுமுறை மூலம் கடைப்பிடிக்கக் கூடியதாக உள்ளது. எமது நாட்டில் பாடசாலைகள் காலை 07.30 மணிக்கும் ஏனைய அலுவலகங்கள் காலை 08.30 மணிக்கும் தனியார் வர்த்தக ஸ்தாபனங்கள் காலை 09.00 மணிக்கு அல்லது காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகின்றன. இந்த பாடசாலைகளிலும் அரச, தனியார் இஸ்தாபனங்களிலும் வேலை செய்பவர்கள் வேறுபட்ட நேரங்களில் தங்கள் கடமைகளுக்கு செல்லவேண்டி இருக்கின்றது.
இவ்வாறு காலை 08.30 அல்லது காலை 09.00 க்கு வேலைகளைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு இந்த கை விரல் அடையாள முறைமூலம் கடைமைகள் ஆரம்பிப்பது வெற்றியளிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் காலையில் 07.30 மணிக்கு ஆரம்பிக்கும் பாடசாலைகளுக்கு இம்முறை பொருத்தமானதா…? இந்த கேள்வி பல ஆசிரியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
அதிலும் கணவனும், மனைவியும் பாடசாலைகளிலும் வேறு தாபனங்களில் வேலைசெய்பவர்களாக இருந்தால் இது இன்னும் மோசமாகின்றது. இந்த விரல் அடையளப் பதிவின்மூலம் கடமையை ஆரம்பிக்கும் முறை 05 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில்கடமையாற்றும் ஆசிரியர்களை கொண்ட நகரப்புறப் பாடசாலைகளுக்கு பொருத்தமானதாக அமையலாம்.
இருந்தாலும் இம்முறைமை இன்னும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் அமுல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகஸ்டப்பிரதேச, கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு இது எவ்வகையிலும் பொருத்தமற்றதாக இருக்கின்றது. இப்பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மாவட்டம் கடந்து, வலயம் கடந்து இவ்வலயத்திலும் தூரத்திலுள்ள மூலைமுடுக்குக் கிராமங்களில் கடமைகளைச் செய்கின்றனர். வீதிகளே ஒழுங்காக இல்லாத இந்தப் பாடசாலைகளுக்கு காலை 07.30 மணிக்குச் செல்வதில் வீதித்தடைகள், நேரத்தடைகள் யானைகளின் தொல்லை எற்படுகின்றன.
இதனால் அதிகஸ்டப் பிரதேசப் பாடசாலைகளில் கஷஸ்டத்தோடு சேர்த்து விரல் அடையளப் பதிவுக் கஸ்டத்தையும் எதிர்நோக்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு கஸ்டப்பிரதேச ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒரு நிமிடம் தாமதித்துச் செல்கின்றபோது அவர்களுக்கு நிர்வாகிகளினால் விடுமுறை கணிக்கப்படகின்றது. அதேநேரம் மாகாணத்தில் இன்னும் எத்தனையோ பாடசாலைகள் கைவிரல் அடையளா இயந்திரத்தை பொருத்தாமல் இருக்கின்றன. இந் ஆசிரியர்கள் இந்த விதிமுறைக்கு உள்ளாவதில்லை. எனவே ஒரு மாகாணத்தில் ஒரு பகுதி ஆசிரியர்கள் இந்த விரல் அடையாள முறையை பின்பற்றியதனால் அவர்கள் ஒரு நிமிடம் பிந்தி வந்ததற்காக விடுமுறையும், இன்நொருபகுதில் இம்முறை அமுல்படுத்தாமல் இருப்பது ஆசிரியர்களுக்குச் செய்யும் அநீதியும், முறைகேடுமாகும்.
இதனால் ஆசிரியர்கள் நேரத்திற்கு சமூகமளிக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வும், ஆளுமைப் பாதிப்பும் ஒரு நிமிடம் தாமதித்தாலும் இன்று விடுமுறை கணிப்பப்படும் என்ற உணர்வால் அன்று பாடசாலை சமூகமளிக்க முடியாத நிலையும் ஆசிரியர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இதனால் ஒரு நிமிடத்திற்காக ஆசிரியர்கள் அன்று பாடசாலைக்கு சமூகமளிக்காது விடுவதனால் மாணவர்களின் முழுநாள் கல்வியும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
மேலும் காலை 07.30 மணிக்குள் கைவிரல் அடையாளம் இடவேண்டு என்பதற்காக தமது சொந்த மோட்டார் சைக்கிளில் பல கிலோமீற்றர்கள் பயணிக்கின்றார்கள். இதனால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. அண்மையில் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் கடமைக்கு காலை 07.30 மணிக்கு முன்னதாக விரல்அடையாளத்தை பதிவுசெய்யவேண்டும் என்பதற்காக பயணித்த கணவன், மனைவியாகிய இரு ஆசிரியர்கள் விபத்துக்குள்ளாகினர். அதில் கணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, மனைவி கடும் காயமுற்றார். இதற்கு முன்னரும் இப்பிரதேசத்தில் ஒரு ஆசிரியர் உயிரிழந்திருந்தார். அத்தோடு பல ஆசிரியர்கள் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து இருக்கின்றனர்.
இந்த உயிரிழப்புக்களை பொறுப்புவாய்ந்த அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் இது போன்று உயிரிழப்புக்கள் இன்னும் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அதிகஸ்டப் பிரதேசங்களில் வேலைசெய்யும் ஆசிரியர்கள் தூர இடங்களில் இருந்து இந்த குறுகிய நேரத்தில் பல கிலோமீற்றர்களை கைவிரல் அடையாளத்திற்காக அதிவேகமாக பயணிப்பதை கஸ்டப்பிரதேசங்களில் காண்கின்றோம். வீதி ஒழுங்கில்லாத இப்பாதைகளில் வேகமாக பயணிப்பது மிகவும் ஆபத்தானதும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தக்கூடியதுமாக உள்ளது. எனவே கல்விக்கு; பொறுப்பான அதிகாரிகள் கல்வியை கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டும். இந்த கைவிரல் அடையாள முறையை பாடசாலைகளுக்கு இல்லாமல் செய்யவேண்டும் அல்லது பொருத்தமான இடங்களில் பிரயோகிக்கவேண்டும் என்பதே கஸ்டப்பிரதேச ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் எதிர்பார்ப்பாகும். இதற்கு கல்வி அமைச்சர் சரியான தீர்வை வழங்கவேண்டும் என்றார்.