இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ‘நாகராஜ சாக்ய புத்ர ஞாதி’ மருத்துவ காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (2021.01.08) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
புதிய காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தி கௌரவ பிரதமர் மஹா சங்கத்தினருக்கு காப்புறுதி பத்திரங்களை வழங்கிவைத்தார்.
இத்திட்டத்திற்கமைய மஹா சங்கத்தினரின் தாய், தந்தை, சகோதர சகோதரிமார் அரச வைத்தியசாலை அல்லது தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது நாளொன்றுக்கு 1000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 15000 ரூபாய் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனை அல்லது ஒளடதங்களுக்காக அதிகபட்சம் 25000 ரூபாய் வரை செலுத்தப்படும்.
இதற்காக 2000 ரூபாய் வருடாந்தம் செலுத்தப்பட வேண்டியதுடன், அது புண்ணிய நிகழ்வொன்றின் போது பக்தர்களினால் வழங்கப்படலாம்.இக்காப்புறுதி வாய்ப்பு எதிர்காலத்தில் பிற மதத் தலைவர்களுக்காகவும் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சாசனத்திற்கு பிள்ளைகளை தியாகம் செய்த, வீடற்ற பெற்றோருக்கு வீடு பெற்றுக் கொடுக்கும் ‘மிஹிது நிவாச’ வீடமைப்பு திட்டத்திற்கு வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமர் இதுவரையிலும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்த கொழும்பு புதிய கோரளை மற்றும் தொட்டமுனையின் தலைமை சங்கநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய திவியாகஹ யசஸ்ஸி தேரர், புத்தசாசனத்திற்கான இச்சேவை தொடர்பில் கௌரவ பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தார்.
காணி இருந்தும் வீடொன்றை நிர்மாணித்து கொள்வதற்கு இயலாத மஹா சங்கத்தினரது பெற்றோருக்காக வீடொன்றுக்கு ரூபாய் 06 இலட்சம் வீதம் 2000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு கௌரவ பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரர், பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன தேரர், களனி ரஜமஹா விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர், பேராசிரியர் இதுறுகானே தம்மரதன தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.
மேலும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, பௌத்த விவகார ஆணையாளர் சுனந்த காரிப்பெரும, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் வெள்ளவத்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்