அம்பாறை மாவட்டத்தில் பில நிறத் த்தி தாக்கம்

அம்பாறை மாவாட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட நெற் செய்கையில் துரிதமாக பரவி வரும் கபில நிறத் தத்திகளின் தாக்கத்தினை கட்டுப் படுத்தும் வகையில் விவசாயத் துறையினரால் தற்போது பல்வேறு விழிப்புணர்வு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்நோய் பற்றியும் இதன் தாக்கத்திலிருந்து எவ்வாறு விடுபட முடியும் என்பது பற்றி விஷேட விழிப்புணர்வு நிகழ்வு இன்று(07) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தலைமையில் ஆரம்பமான இவ்விழிப்புணர்வு வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் மக்கள் மத்தியில் ஒலி பெருக்கியின் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், கபில நிறத் தத்திகள் நோய் தொடர்பான கையேடுகளும் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.
இதேவேளை, கபில நிறத் தத்திகளின் தாக்கம் அதிகம் உள்ள விவசாயச் செய்கைகளுக்கு நேரடியாகச் சென்று இந்நோய்த் தாக்கம் தொடர்பில் களப் பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், விவசாயிகளுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வரும் இக்கபில நிறத் தத்திகளின் தாக்கத்தினால் தற்போது 500 ஏக்கர் விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது ஐம்பது ஏக்கர் நெற் செய்கை இந்நோய்த் தாக்கத்தினால் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை இரண்டு இலட்சம் ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நெற் செய்கையினை மிக வேகமாக கபில நிறத் தத்திகள் தாக்கி வருகின்றன. இந்நோய்க்கு விவசாயிகள் பரிந்துரை செய்யப்பட்ட கிருமி நாசினிகளையே விசுற வேண்டும் என்பதுடன், நெற் பயிரின் வயதிற்கேற்ப கிருமி நாசினிகள் கண்டிப்பாக விசுற வேண்டியுள்ளதால், விவசாயத் துறை உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இதற்கான கிருமி நாசினிகள் விசுறப் பட வேண்டும். விவசாயத் துறையினரின் அறிவுறுத்தல்கள் அற்று விசுறப் படும் கிருமி நாசினிகள் மூலமாகவும் நெற் செய்கைள் அழிவடைந்து வருவதாகவும் பிரதி விவசாயப் பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Related posts