க.பொ.த.சாதாரணப் பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகஸ்தர்களுக்கான  அறிவுறுத்தற் கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரணப் பரீட்சைக்கு (2021/2022 மே மாதம்) பரீட்சை கடமையில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்களின் பணிக்குழுக்களுக்கான அறிவுறுத்தற் கூட்டம் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் தலைமையில் புதன்கிழமை (18) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் பணிப்பாளர் எஸ். பிரவணதாஸன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரீட்சையை சிறப்பாக  நடாத்துவதற்குரிய சட்ட, வழிகாட்டல் ஆலோசனைகளை பல்லூடகத்தின் ஊடாக பரீட்சை கடமையில் ஈடுபடும் தெளிவூட்டல்களை வழங்கினார்.
 
மட்டக்களப்பு மேற்கு கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், கல்குடா கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி, மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம்.செயிட் உமர் மௌலானா, மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குமார ஹெட்டியாராச்சி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி, பிராந்திய சேகரிப்பு நிலைய இணைப்பாளர்கள், உதவி நிலைய இணைப்பாளர்கள், வலய மேற்பார்வையாளர்கள், பிராந்திய மேற்பார்வையாளர்கள், பரீட்சை இணைப்பு நிலைய பொறுப்பாளர்கள், பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்கள், உதவி பரீட்சை மேற்பார்வையாளர்கள் என அதிகளவிலானோர் கலந்துகொண்டார்கள்.
 
இதன்போது பரீட்சைக்குரிய பாதுகாப்பு, கொவிட் சுகாதார வழிமுறைகள், பரீட்சையை எவ்வாறு சிறப்பாக நடாத்துதல், வினாப்பத்திரங்களின் அமைப்பு, மாணவர்களை எவ்வாறு பரீட்சைக்கு அழைத்தல், நேரமுகாமைத்துவம், பரீட்சை நிலையங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்த்தல், பரீட்சை அட்டவணைகள் சம்பந்தமான விடயங்கள், பரீட்சை மண்டப அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட பரீட்சைக்கான மேலதிக தகவல்கள் இங்கு தெளிவூட்டப்பட்டது.
 
மட்டக்களப்பு மாவட்டதில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரணப் பரீட்சைக்காக 14 இணைப்பு நிலையங்களும்,125 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன் இப்பரீட்சைக்கு மாவட்டத்தில் இருந்து 17,416 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைக்காக ஒன்று சேர்க்கும் நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

Related posts