தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் சோரம்போகவில்லை. இந்த அரசாங்கத்தினை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையிலேயே வெளியில் இருந்து ஆதரவு வழங்கிவருகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் பொதுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய அரசாங்கத்தினை ஏற்படுத்துவது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளிகளாக இருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றிருக்கமுடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் நிதானமாகவே செயற்பட்டுவருகின்றது. இங்கு வருகை தருகின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நாங்கள் சொல்கின்ற விடயம் எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பாக ஐ.நா சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஐ.நா சபைக்கு நாங்கள் செல்லவிருக்கின்றோம். இந்த அரசாங்கம் ஐ.நா சபையின் தீர்மானங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு உடந்தையாக இருக்க முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.