தற்கொலைப்படைத் தாக்குதல் 44 பேர் பலி ! இந்த தாக்குதலுக்கு காரணமானவரின் பின்னணி

ஜம்மு-காஷ்மீரில் நேற்று நடந்த கோரத்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ஆதில் அகமது தாரின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

`இப்படியோரு தாக்குதல் நடக்க வாய்ப்பே இல்லை. பெரும்பாலான சுங்கச்சாவடிகள், பலத்த பாதுகாப்புகளைத் தாண்டி தீவிரவாதி வெடிபொருள் நிரம்பிய வாகனத்தை கொண்டு செல்லமுடியவே முடியாது. எங்கோ தவறு நடந்துள்ளது’ என அடித்துச் சொல்கிறார் சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா. உலக நாடுகளைச்சேரந்த தலைவர்கள் பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உயிர் பறிபோயுள்ளது. இதில் தமிழகத்தைச் சேரந்த வீரரும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் சபலபேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் உயிரிழப்பு குறித்து அவர்களது வீட்டுக்கு தெரியப்படுத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இருபது ஆண்டுகளுக்குப் பின் இப்படியொரு கோரத் தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தாக்குதலை நடத்திய ஆதில் அகமது தார், கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ் அமைப்பில் இணைந்துள்ளான். தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டிபா என்ற இடத்தைச் சேர்ந்தவன். ஆதில் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர், அருகிலிருந்த மில் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளான். இவரது தந்தை ரியாஸ் அப்பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். உறவினர் ஒருவர் மூலம் ஆதிலுக்கு பயங்கரவாத அமைப்பு மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் மூளைச் சலவை செயப்பட்டு, ஓராண்டுக்கு முன் ஜெய்ஷ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளான். 

இதைப் பயன்படுத்திக்கொண்ட அந்த அமைப்பு, ஆதிலை தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயார் படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்ற வேண்டும் என்று திட்டம் திட்டப்பட்டது. இதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்திருந்தவர்கள், ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வாகனத்தில் மோத திட்டமிட்டனர். அதன்படி 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய காரை ஓட்டிய ஆதில், வீரர்கள் வாகனத்தின் மீது மோதி தற்கொலைப்படை தாக்குதலை நிகழ்த்தியுள்ளான்.

இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து, அவர்களை தற்கொலைபடைத் தாக்குதலுக்கு பல்வேறு ஆண்டுகளாக ஜெய்ஷ் அமைப்பு தயார் செய்து வருகிறது. இந்த தாக்குதல் குறித்து, `என் பெயர் ஆதில். நான் ஓராண்டுக்கு முன் ஜெய்ஷா இயக்கத்தில்இணைந்தேன். நான் எதற்காக சேர்ந்தேனோ அதற்கான சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன் நான் சொர்கத்தில் இருப்பேன். காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய கடைசி செய்தி!’என்று பேசிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் ஆதில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கிறான்.இது தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை, அப்பகுதிக்குச் சென்று தொடங்க உள்ளது


Related posts