கல்வெட்டு உடைப்பு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

கல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ கட்சியின் முக்கியஸ்தருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வழக்கு விசாரணை, ஏப்ரல் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வழக்கு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.றிஸ்வான் முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான ஹென்றி மகேந்திரன் சார்பான பிரதான சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, மன்றுக்கு சமுகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதன் பேரில், மேற்படி திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக, நீதவான் அறிவித்தார்.

கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதைக்கு, கல்முனை மாநகர சபையால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன், இவ்வீதியைத் திறந்து வைப்பதற்காக மாநகர சபையால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது.

அதேவேளை, இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக, அங்கு ஹென்றி மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

இதன்போது, ஹென்றி கேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார் என்று, அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75,000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட வழக்கு விசாரணை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts