பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் போன்றவர்களே இன முரண்பாடுகளுக்கு காரணம்! ஊடகச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் குற்றச்சாட்டு!

முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  ஹரீஸை போன்றவர்களின் குரோத பார்வையே  இன முரண்பாடுகளுக்கு காரணம் என த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
 

நேற்று(10) திங்கட்கிழமை நண்பகல் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது நாவிதன்வெளி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக் கருத்தினை முன்வைத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்…

வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது. 
 
ஆனால், சிறுபான்மைச் சமூகமாக இருக்கின்ற முஸ்லிம் அரசியலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களுடைய பூர்வீக பிரதேசங்களை கபளீகரம் செய்கின்ற விடயம் நீண்டகாலமாக அரங்கேறி வருகிறது. அந்த முன்னெடுப்பின் அங்கமாகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் குறைப்பு விடயத்தினைப் பார்க்கின்றேன்.
 
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கடந்த 33 வருடங்களாக தனியான செயலகம் போன்று இயங்கி வருகிறது. அவ்வாறான வேளையில் முஸ்லிம் அரசியலாளர்கள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக தமிழர் பிரதேசங்களை கூறுபோட்டு  கபளீகரம் செய்ய முற்படுகின்றனர்.
 
 நிச்சயமாக இவ்வாறான செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலே தமிழ் – முஸ்லிம் உறவில் பாரிய ஒரு விரிசலை ஏற்படுத்தும்.
 
தமிழர்கள் பல விதமான துன்புறுத்தலுக்கு ஆளான யுத்த காலத்தை சாதக சாதுர்யமாகப் பயன்படுத்தி பல விடயங்களை கிழக்கிலே கையாண்டு முஸ்லிம் மக்களின் இனப் பரம்பலை அதிகரிப்பதற்காக முழு மூச்சாக செயற்பட்டிருக்கிறார்கள்.

Related posts