தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (05) விடுக்கப்பட்டுள்ள ஊடக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி கூறியுள்ளதாவது,
சுயநலத்தை உதறி தள்ளிவிட்டு, ஒன்றுபட்டு செயற்பாட வருமாறு, அக்கறைக் கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை என்றும் நடைமுறைகளை அவதானிக்கும்போது மேலும் எத்தனை தீபாவளிகள் தாண்டும் என தெரியவில்லை என்றும் சுயநலம் கருதி சிலர் செயற்பட்டமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு பதவிக்கும் ஆசைப்படாது, 60 ஆண்டுக்கு மேல், மக்கள் சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த தான், தனது அரசியலில், இன்றைய நிலைப்பாட்டை, நம் மக்களுக்கத் தெளிவுப்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.
சட்டக்கல்லூரியில், 60 ஆண்டுகள், விக்னேஸ்வரனை தான் அறிவதாகவும் அவரைப் பற்றிய தப்பான அரசியல் விமர்சனங்கள் வந்தபோது, அவற்றையும் தான் கண்டித்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், ஏனைய சிலர், தொடர்ச்சியாக செய்தது வருவதுபோல, அவர் நம்மினத்தை விற்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டார் என்பதை தான் நன்றாக அறிவதாகவும் கூறியுள்ளார்.
இன்றுவரை தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி தனித்து, எல்லா வட்டாரங்கள், தொகுதிகளிலும் போட்டியிடும் தீர்மானத்துடனேயே உள்ளது என்றும் அப்படி இருப்பதற்கு நியாயப்படுத்தகூடிய பல காரணங்கள் உண்டு என்பதை, சகல கட்சிகளின் தலைவர்களும், தம் தம் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டும் என்றும், ஆகவே, சி.வி.விக்னேஸ்வரன், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்கும் பட்சத்தில், அவருடன் இணைந்து செயற்பட, தாங்கள் அனைவரும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதே ஏற்பாட்டைதான், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சி.விக்கு, கட்சியின் தலைவர் பதவியை வழங்க முன்வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னைப் பொறுத்த வரையில், பிரச்சினைத் தீரவேண்டும் என்பதேயொழிய, எதுவித பதவியையும் இலக்கு வைத்து இன்றுவரை செயற்படவில்லை என்பதை உறுதியாக கூறி, நல்லெண்ணம் படைத்த அனைவரையும் ஒன்று சேர வருமாறு அழைப்பதாகவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.