தவிசாளரின் போக்கினால் சட்டரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் : பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி எச்சரிக்கை !

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் சபையின் சில உறுப்பினர்களை புறந்தள்ளி தனக்கு சார்பானவர்களுடன் மட்டுமே செயற்படுகின்றார். காரைதீவு பிரதேசசபையின் நிதியிலிருந்து LED தெருமின் விளக்குகளை கொள்வனவு செய்வதற்கு எம்மால் சபை அமர்வில் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ஒரு உறுப்பினருக்கு மூன்று மின் விளக்குகள் வீதம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் வரவு செலவு அறிக்கையில் ரூபா 344,000 செலவில்  LED  தெருமின்விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டதாக கணக்கறிக்கை காட்டப்பட்டுள்ளது என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் க.குமாரஸ்ரீ தெரிவித்தார்.
 
இன்று காரைதீவில் அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
 
இன்றுவரை எத்தனை விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு எங்கே பூட்டப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சில உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு அவர்களினால் பூட்டப்பட்டுள்ளது. இன்றுவரை எனக்கும் சில உறுப்பினர்களிற்கும் இவை வழங்கப்படவில்லை. தவிசாளர் என்மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறு செயற்படுகின்றார் என நினைக்கிறேன். இவரின் தலைக்கண செயற்பாட்டிற்கு அஞ்சுபவன் நானல்ல. நான் மக்கள் நலனுக்காக செயற்படுபவன். இதேபோல்தான் கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தின்போது காரைதீவு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 117 LED மின்விளக்குகளுக்கு என்ன நடந்ததென்று இன்றும் மர்மமாக உள்ளது. அப்போது அது சம்பந்தமாகவும் மேலும் இரண்டு உறுப்பினர்களுடன் எழுத்துமூலம் நான்  கேட்டிருந்தேன் பதிலில்லை.
 
காரைதீவு பிரதேசசபை தவிசாளர் மக்களின் வரிப்பணத்தை தானே அனுபவிக்க முடியாது. அவ்வாறு தன்னிச்சையாக செயற்படுவாராயின் சட்டரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவரை எச்சரிக்கின்றேன் என்றார்.

Related posts