(எம்.ஏ.றமீஸ்)
நாட்டில் உள்ள மூவின மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கும் அவரவர் தத்தமது அபிலாஷைகளை தங்கு தடையின்றி நிறைவேற்றுவதற்கான நிலைமையினை ஏற்படுத்துவதற்குரிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையினை முன்வைத்து இந்த நாட்டை பாதுகாக்கக் கூடிய ஒருவரிடம் இந்நாடு கையளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு எமது தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளது என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று(23) இரவு நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை எமது தேசிய காங்கிஸ் கட்சி ஆதரிக்க முடிவு செய்து அவரிடம் நாம் மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்தோம்.
கொடிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நிலையான சமாதானம் இந்நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், இரவோடு இரவாக இணைக்கப்பட்டிருந்த வட கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் எனவும், இந்நாட்டில் உள்ள மூவின சமூகங்களும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் தக்கான அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு அதற்கான அரசியலைப் பொன்று உருவாக்கித் தர வேண்டும் என வேண்டிக் கொண்டோம்.
அதற்கமைவாக, எம்மால் கோரப்பட்டிருந்த பிரதான கோரிக்கைகளுள் இரண்டு கோரிக்கைகள் அவரால் நிறைவேற்றித்தரப்பட்டன. அக்கோரிக்கைகளும் எஞ்சியிருந்த மூன்றாவது கோரிக்கையான அனைத்து மக்களையும் நிம்மதியாக வாழ வைப்பதற்கான நிலைப்பாட்டினை இந்நாட்டில் ஏற்படுத்தபடுத்துவதற்குரிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையினை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ அணியினரிடம் நாம் முன்வைத்து எமது ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளோம்.
இந்த நாட்டில் உள்ள சிறுபான்மைச் சமூகத்திற்கு நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமைதான் உகந்தது. தமிழ் மக்களுக்கும் இம்முறைமைதான் உகந்தது. ஆனால் அவர்கள் அதனை தேவையில்லை என இப்போது கூறுகின்றார்கள்.
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி இந்நாட்டில் இருந்தால், ஜனாதிபதி அனைத்து மக்களையும் கவனிக்க வேண்டி வரும். ஆனால் அந்நிலைமை இல்லாது அவ்வதிகாரம் பாராளுமன்றத்திற்கு செல்லும்போது பாராளுமன்ற உறுப்பினர்களை ஏதோ ஓர் வகையில் ஒன்று திரட்டினால் வேண்டிய தீர்மானங்களை இந்நாட்டில் நிறைவேற்ற முடியும். வேண்டிய சட்டங்களை அமுல்படுத்த முடியும் என அவர்கள் வேறோர் விதமான கனவினைக் காண்கின்றார்கள்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மிக முக்கியத்துவம் மிக்க தேர்தலாகும். நாட்டின் தலையெழுத்தினை மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இந்நாட்டில் உள்ள சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று பிரிந்திருக்கின்ற நிலைமை மாற வேண்டும்.
முஸ்லிம் மக்களுக்கு என்ன நன்றி செய்தாலும் அவர்கள் எமக்கு வாக்களிப்பதில்லை அவர்கள் நன்றி கெட்டவர்கள் தொப்பி புரட்டுகின்றவர்கள் என்ற நிலையிலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற வேண்டும். ஒரு காலத்தில் நமது முஸ்லிம்கள் அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும், தொழில் துறைகளில் ஈடுபடுவதற்கும் படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சில பிரதேசங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக எமது பள்ளிவாசல்களைக் கூட கைவிட்டு விட்டு வந்த நிலைமை இந்நாட்டில் உள்ளது.
முஸ்லிம்களுக்காகவும் நமது முஸ்லிம் பிராந்தியத்தினை பாதுகாப்பதற்காகவும் எத்தனையோ சிங்கள மக்கள் படையினராக இருந்து யுத்தம் புரிந்து போராடி மரணித்திருக்கின்றார்கள். எத்தனையோபேர் ஊனமுற்றுள்ளார்கள். இவ்வாறாக அவர்கள் இறந்ததும், ஊனமுற்றதும் நமது நாட்டினையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கே அவர்களின் தியாகம் அமைந்தது.
அவ்வாறு பாதுகாத்தும்கூட முஸ்லிம் மக்கள் நன்றி கெட்டவர்கள் என்று நம்மை 2015இல் நையப்புடைத்தார்கள். பெரும்பான்மை இனத்தவர்கள் எம்மை எள்ளிநகையாடினார்கள். தமிழ் மக்களும் எம்மை எள்ளிநகையாடினார்கள். இதுதான் நமது முஸ்லிம் மக்களின் நிலைமை உள்ளது. இவ்விடயம் முழு சிங்கள மக்கள் மத்தியிலும், சிங்களப் பிராந்தியத்திலும் ஊடுருவுகின்றபோது இயற்கையாகவே அங்கே இனவாதம் தோன்றுகின்றது.
முஸ்லிம் மக்களை மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக அழுத்கம பிரச்சினையினை தோற்றுவித்து எமது சமூகத்தினை தனிமைப் படுத்தியது போன்று, பிரதமர் ரணில் விகரமசிங்க ஆட்சியினைப் பொறுப்பேற்றதும் முஸ்லிம்களை கறிவேப்பிலை போன்று பயன்படுத்தியுள்ளார்.
அளுத்கம போன்ற இடங்களில் இரவோடு இரவாக இடம்பெற்ற கலவரத்தினை முடிவிற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும் அவர்களுக்கான வாழ்வதற்கான வசதி வாய்ப்புக்களையும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் செய்து கொடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள் இவ்வாறான சதி வேலையினை செய்து விட்டு மஹிந்த ராஜபக்ஷ மீது வேண்டுமென்று வீண் பழியினை சுமத்தியதனை நன்கு அறிந்த கலவரம் ஏற்பட்ட பகுதி முஸ்லிம் மக்கள் தற்போது மஹிந்த தரப்பினருக்கு அதிகப் படியான வாக்குகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சிறு சிறு பிரச்சினைகள்தான் முஸ்லிம்களுக்கு இருந்தது. ஆனால் ஆட்சியினைக் கையில் எடுத்த ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சினை தனது கையில் எடுத்த மறுநாளே அம்பாறை பள்ளிவாசல் உடைக்கப்பட்டு கவலரம் ஆரம்பித்தது. இதேபோல் பாதுகாப்புத் தரப்பினர் பார்த்துக் கொண்டிருந்தபோது திட்டமிடப்பட்டு இவ்வாட்சியில் நமது முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இந்நாட்டில் இடம்பெற்றதனை நாம் மறந்து விட முடியாது.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படும் அளவிற்கு இந்த ஆட்சியில் திட்டமிடப்பட்ட சதி நடந்திருக்கின்றது. இலங்கை ஒற்றுமையின் சம நிலையினை குழப்பும் வகையில் வெளிநாட்டு சக்திகள் மூலமாகவும் இச்சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இனக் கலவரத்தினை ஏற்படுத்துவதற்கும் நாட்டின் சம நிலையினைக் குழப்புவதற்கு நமது முஸ்லிம்களை தொடர்ச்சியாக கறிவேப்பிலை போன்று பயன்படுத்தி வருகின்றார்கள். கடந்த நான்கரை வருட ஆட்சியானது எம்மால் என்றும் மறக்கப்பட முடியாத அகோரமான ஆட்சியாக இருந்தது.
நமது நாடும், நாட்டின் இறைமையும் பாதுகாக்கபப்டுகின்றபோது மாத்திரம்தான் இங்கு வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். நாட்டுப் பற்றுள்ள உண்மையான தலைவர் ஒருவர் நாட்டின் ஆட்சிக்கு வருகின்றபோது மக்கள் நிம்மதியுடன் வாழக்கூடிய சூழல் இந்நாட்டில் ஏற்படுவதுடன் நாட்டின் ஆட்புல எல்லைகளும் பாதுகாக்கப்படும்.
இந்த நாட்டையும் முஸ்லிம் சமூகத்தினையும் பொறுத்த வரையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல்வேறு அரசியல் கள நிலவரங்களை நேரடியாக கண்டவர்கள் என்ற அடிப்படையில் நமது நாட்டில் உள்ள மூவின சமூகமும் நிம்மதியாக வாழ்வதற்கான நிலைமை உருவாக்கப்படுவதோடு, இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணியினரைத் தவிர வேறு எவராலும் அது முடியாது என்பதனை மிக பகிரங்கமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிக தந்திரோபாயமாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவில்லை. மிக நீண்ட காலமாக ஜனாதிபதி ஆசனத்திற்கு ஆசை கொண்டவர். அவரது அரசியலின் அந்திம காலப் பகுதியில் இருக்கின்ற அவர் இத்தேர்தலில் வெற்றி பெற முடியுமாக இருந்திருந்தால் அவர் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இத்தேர்தலில் தானே களம் இறங்கியிருப்பார். தோல்வியினை அவர் ஒப்புக் கொண்டதனால்தான் சஜித் பிரேமதாசாவினை அவர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்கியிருக்கின்றார் எனக் குறிப்பிட்டார்.