இந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற ஒன்று இல்லை : மக்கள் விடுதலை முன்னணியின் சலீம் ஆதம் !!

அபு ஹின்ஸா 
 
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என யாரும் போட்டியிடாத ஒரு முக்கிய ஜனாதிபதித் தேர்தலாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நோக்கலாம். வெள்ளையர்களிடம் இருந்து இந்த நாடு சுதந்திரம் பெற்ற போது எந்த ஒரு இலங்கைப் பிரஜையும் ஒரு ரூபாய் கூட கடனாளியாக இருந்திருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சலீம் ஆதம் தெரிவித்தார்.
 
நேற்று மாலை பொத்துவில் நகரில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தலைமை உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
 
2019ஆம் ஆண்டு ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் ஐந்து லட்சத்து 30 ஆயிரம் கடனுடன் வாழ்கின்றோம். 98 சதவீதமான உழைக்கும் மக்களை இரண்டு சதவீதமான முதலாளித்துவ மக்கள் ஆட்சி புரிவதனால்தான் இவ்வாறான நிலை உருவாகியுள்ளது.
 
மக்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றார்கள் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஊழலற்றவர் ஏழைகளின் பசி அறிந்த அவர் நன்கு படித்தவர் இந்த நாட்டை ஆட்சி புரிவதற்கு சகல திட்டங்களும் கொன்டவர் என்று பேசிக் கொள்கின்றார்கள் இருந்தாலும் வெல்வாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்து கொண்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் அனுரகுமார நல்லவர்தான் ஆனால் வெல்ல மாட்டார் என்கின்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.
 
இம்முறை ஆட்சியை தீர்மானிக்க போகும் வாக்குகள் இளைஞர்களின் வாக்குகளாகவே இருக்கும். அரசியல் தலைவர்கள்  தங்களுடைய வாக்குகளை பெற்றுக்கொள்ள பெரும்பான்மை, சிறுபான்மை என்று சொல்லி புதிய சொற்களை அறிமுகப்படுத்தி எங்களை பயமுறுத்துகிறார்கள் ஆனால் என்னைப் பொருத்தவரையிலும் என்னுடைய கட்சியை பொறுத்தவரையிலும் இந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற ஒன்று இல்லை. எல்லோரும் இலங்கையர்.
 
சிறுபான்மை எனும் சிறிய வட்டத்திற்குள் உங்களை அமுக்கிவிட்டு வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே அரசியல்வாதிகள் குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். எங்களுடைய குழந்தைகள் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாமல் பாடசாலைகலே இல்லாமல் கஷ்டப்படுவது போன்று அல்லாமல் அவர்களுடைய பிள்ளைகள் மிக வசதியாக தன் எதிர்காலத்தை செதுக்கிக் கொண்டிருக்கின்றார்கள் நாங்கள் கேட்பதெல்லாம் எல்லோருக்கும் சமனான ஒரு இலங்கை தான். அதற்கான கொள்கையும் திட்டமிடலும் எங்களிடம் இருக்கின்றது. பல வருடங்களாக இந்த நாட்டை ஆண்ட எல்லோரும் சொல்கிறார்கள் இந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக. கடந்த காலங்களில் நாம் செய்த அரசியல் தெரிவின் பிழைகள் காரணமாக இப்போது நாம் கஷ்டப்படுகிறோம். இவற்றையெல்லாம் மாற்றியமைக்க முஸ்லிங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் தொடர்ந்தும் குரல்கொடுக்கும் அனுரவே எமது தெரிவாக இருக்க வேண்டும் என்றார்.

Related posts