கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சம்மந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி கொழும்பு சங்கரி-லா விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதல், தற்கொலைத் தாக்குதலாக அமைந்துள்ளதாகவும் இதில் இரண்டு தற்கொலைதாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் புலன் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது.
விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராவில் இதுகுறித்த மூலங்கள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் குறித்த விடுதியில் 616ஆம் இலக்க அறையில் பதிவுசெய்து தங்கியதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் உணவகப் பகுதி மற்றும் மண்டபப் பகுதி ஆகியவற்றிலேயே குண்டை வெடிக்கவைத்துள்ளனர்.
இந்த மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து உபயோகப்படுத்தபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் குறித்த தீவிரவாதிகள் தங்கியிருந்த அறையை உடைத்து உள்ளே சென்ற புலனாய்வாளர்கள் அங்கிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் பயன்படுத்தும் உடமைகள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் உள்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களா என்பது குறித்த தெளிவான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் முப்படையினரும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தகதாகும்.