புத்தாண்டில் சம்மாந்துறையில் பொதுஜனபெரமுனவில் 3000பேர் இணைவு! அமைப்பாளர் முஸம்மில் தலைமையில் பிரதியமைச்சர் விமலவீதிசாநாயக்க பிரதமஅதிதி

புத்தாண்டு பிறந்த நேற்றையதினம்(01) புதன்கிழமை சம்மாந்துறையில் ஆளும் பொதுஜனபெரமுனை கட்சியில் மூவாயிரம்(3000) பேர் அங்கத்தவர்களாக இணைந்தனர்.
 
அதற்கான வைபவம் நேற்று(1) காலை பொதுஜனபெரமுன கட்சியின் சம்மாந்துறைத்தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினருமான வை.எம்.முஸம்மில் தலைமையில் அவரது பணிமன வளாகத்தில் நடைபெற்றது.
 
பிரதமஅதிதியாக வனஜீவராசிகள் அமைச்சின் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட பொதுஜனபெரமுன பாராளுமன்ற ஊறப்பினருமான விமலவீர திசாநாயக்க கலந்துகொண்டார்.
 
அங்கு அவர் பேசுகையில்: நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கான உதவிகளை நிறையச்செய்யலாம். வாக்களியாமல் உதவிகளை எதிர்பார்க்கமுடியாது. கடந்ததேர்தலில் நீங்கள் எதிர்பார்த்த வாக்குகளை எமக்கு அளிக்கவில்லை. ஆனால் உதவிகள் கேட்டுவருகிறீர்கள். அது நியாமமல்ல. 
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனமாவது கூடுதலாக பெற்று  எமது பொதுஜனபெரமுனதான் ஆட்சியமைக்கும். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.உங்கள் அமைப்பாளர் முஸம்மிலின் கரங்களையும் பலப்படுத்துங்கள்.எனவே சகலரும் இணைந்து ஒற்றுமையாக வாக்களித்து உங்களையும்நாட்டையும் வளப்படுத்துவோம் வாருங்கள் என்றார்.
 
சம்மாந்துறைத் தொகுதியிலிருந்து நேற்றையதினம் 3000பேர் தாமாக முன்வந்து பொதுஜனபெரமுனவில் இணைந்துகொண்டனர். அவர்களுக்கான அங்கத்துவப்படிவமும் வழங்கப்பட்டன.
 
இதனைவிட சம்மாந்துறைத்தொகுதியிலுள்ள 51 கிராமசேவையாளர் பிரிவுகளுக்கும் கட்சியின் குழுத்தலைவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் பிரதியமைச்சரால் வழங்கப்பட்டன.
 
நிகழ்வில் கல்முனைத்தொகுதி பொதுஜனபெரமுன அமைப்பாளர் வெஸ்ரர் றியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related posts