பெரியநீலாவணை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத்திட்டத்தில் கழிவுநீர் தேங்கிநிற்பதனால் மக்கள் பாதிப்பு

கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத்திட்டத்தில் கழிவு நீர்கள் செல்வதற்கான வடிகான் இல்லாமையினால் அப்பிரதேசத்தில் கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும் துர்நாற்றம் வீசுவதாகம் அப்பிரதேச பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இவ்வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற மக்கள் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பின்னர் இவ்வீட்டுத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். அங்கு வசிக்கின்ற மக்கள் பயன்படுத்துகின்ற கழிவுநீர், மற்றும் மழை நீர் என்பன தேங்கி நிற்பதால் அப்பிரதேசம் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதுடன் நுளம்புகளும் பெருகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
 
சுமார் 110 குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றார்கள். பாடசாலை செல்லும் மாணவர்கள், சிறுபிள்ளைகள் இப்பிரச்சினையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதுடன் குறிப்பாக மழை காலங்களில் ரொயிலட் குழிகள் நிரம்பி வழிவதால் பல அசௌகரியங்களையும், இங்கு வாழ முடியாத ஒரு சூழலும் உருவாகி வருகின்றது என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும்.
தற்போது மாரிமழை பெய்துகொண்டிருக்கின்ற காலம் என்பதனால் மக்களின் வாழ்கையினைக் கருத்திற்கொண்டு இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்கொவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 
 
 

Related posts