பேரினவாத கட்சிகள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவிப்பு.
நாவிதன்வெளி பிரதேசத்தின் வீரச்சோலை கிராமத்தின் சிறி சித்திவிநாயர் ஆலயத்தின் தலைவர் மு. சோமசுந்தரம் தலைமையில் ஆலயத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபத்திலே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்: தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது இந்த நாட்டிலே ஆட்சியை தீர்மானிக்கின்ற ,ஆட்சியை மாற்றுகின்ற,நிலைநிறுத்துகின்ற சக்தியாக கூட்டமைப்பு விளங்குகின்றது.
அந்தவகையிலே இந்த ஆட்சி தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுமாக இருப்பின் இந்த ஆட்சியை மாற்றியமைக்கின்ற அல்லது ஆட்சியை வீழ்த்துகின்ற சகல முயற்சிகளையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும்.
தமிழர்களின் தீர்வு விடையங்களை அரசு புறக்கணிக்குமானால் அல்லது செயற்படுத்த மறுக்குமானால் நிச்சயமாக இந்த ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவதில் முழுமூச்சாக செயற்படும் என்பதனை குறிப்பாக கூற விரும்புகிறேன்.
எங்களது பிரதேசம் ,மாவட்டத்தின் மக்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.
வடகிழக்கில் மூன்றாவது தமிழர்கள் கூடிய மாவட்டமாக அம்பாறை இருந்தாலும். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் மூன்றாவது இனமாக இருக்கின்றோம். இதனை அடிப்படையாகக்கொண்டு நாங்கள் பல தரப்பட்ட பிரதேங்களில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்றால் நாங்கள் ஒன்றித்து பயணிக்க வேண்டும்.
தமிழ் மக்களது உரிமைசார்ந்த விடையமாக இருந்தாலும்,அபிவிருத்தி விடையமாக இருந்தாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குரல்கொடுத்து உங்களுடன் சேர்ந்து பயணிக்கின்றது.
ஏனைய பேரினவாதக்கட்சிகள் அதாவது சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக இருக்கலாம்,ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கலாம் அல்லது மகிந்த ராஜபக்க்ஷவின் பொதுஜன பெரமுனையாக இருக்கலாம் என்றும் தமிழர்களின் நலன் சார்ந்து குரல்கொடுத்ததே கிடையாது.
ஏனைய பேரினவாத கட்சிக்கு பின்னால் போய் செயற்படுகின்றபொழுது எங்களது உரிமைசார்ந்த விடையங்கள் புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்ப்பம் காணப்படும்.ஆகவே இதனை அடிப்படையாகக்கொண்டு நாங்கள் தாய்க்கட்சியை பலப்படுத்த வேண்டும்.
அதற்காக ஆக்கபூர்வமாக ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். இது எமது இனத்தின் எதிர்கால இருப்புக்கு வழிவகுக்கும் என உரையாற்றினார்.
இந்த நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபையின் முன்னைநாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமாகிய தவராசா கலையரசன் அவர்களும், நாவிதன்வெளி பிரதேசசபையின் உறுப்பினர் அ.சுதர்ஷன்,கிராம சேவையாளர்கள்,ஆலய நிருவாகிகள் பொது அமைப்புக்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.