பொதுநூலக விடயத்தில் முயற்சித்து வெற்றியடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபை பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களின் முயற்சியின் மூலமாக மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் பொதுநுலகக் கட்டிடத் தொகுதியினை பூரணப்படுத்துவதற்கான நிதியினை அமைச்சரவை அனுமதி மூலம் பெற வைத்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் நேற்று இடம்பெற்ற 10வது அமர்வின் போது பாராட்டுகளும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் 10வது அமர்வு இடம்பெற்ற வேளையில் மாநகர முதல்வர் மற்றும் நூலகக் குழுவின் தலைவர் ஆகியோரால் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதன் போது மாநகர முதல்வர் தெரிவிக்கையில், எமது பொதுநூலக கட்டிடத்தைப் பூர்த்தி செய்வதற்காக எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் 16.9 கோடி ரூபாய் நிதிக்கான கோரிக்கை 2018.09.11 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட வகையில் அதனை 2019ம் ஆண்டக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகு செயற்பாட்டிற்கு உறுதுணையாக நின்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாநகரசபை உறுப்பினரும் நூலகக் குழுவின் தலைவருமாகிய வே.தவராஜா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இந்த பொதுநூகத்திற்காக 169 மில்லியன் ரூபா நிதியினை சாதாரண பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீநேசன் அவர்கள், அவர்களுடைய ஆற்றல், கெட்டித்தனத்தின் மூலம் உரிய இடங்களுக்குச் சென்று அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கட்டிடப் பூர்த்திக்கான நிதியினை பெற்றுத் தந்துள்ளார். எனவே நூலகக் குழு என்ற அடிப்படையில் இந்த நூல்நிலையத்திற்கான நிதியைப் பெற்றுத் தந்து அதனை எமது காலத்தில் நிறைவு பெறச் செய்வதற்கு எமக்கு ஒத்துழைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களுக்கு இந்த சபை சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியின் பயனாக தேசிய திட்டமிடல் திணைக்கத்தின் அனுமதியைப் பெற்றதோடு, கடந்த 08ம் மாதம் திறைசேரி ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் மதிப்பீடுகள் மற்றும் முறையான விண்ணப்பங்களை சமர்ப்பித்து, மட்டக்களப்பில் தற்போது இயங்கும் நூலகத்தின் வசதி நிலைமை தொடர்பிலும், அமைத்து இடையில் நிறுத்தப்பட்டுள்ள நூலகத்தின் அவசியம் தொடர்பிலும் தெளிவுபடுத்தி பிரதமர் அவர்களின் அமைச்சினூடாக ரூபா 169.97 மில்லியனுக்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை அனுமதிக்காகச் சமர்ப்பிக்கச் செய்திருந்ததோடு கடந்த செப்டெம்பர் மாதம் 11ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டு இத்தொகை அனுமதிக்கச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.