மட்டக்களப்பு – தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான சட்ட ரீதியான தகைமை இல்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அவசர சட்ட ஒழுங்குவிதிகளின்கீழ், அரசாங்கத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என கல்வி மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வைக் குழு பாராளுமன்றத்தில் நேற்று( பரிந்துரைத்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் தயாரித்துள்ள கண்காணிப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் தலைவரான முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி, கல்வி மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வைக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சம்பந்தமாக ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவிக்கையில்….
இதன்போது, குறித்த பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக, நிதி கிடைக்கப்பெற்ற முறைமை தொடர்பில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் குறித்த விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்தக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு நிதி கிடைத்த முறைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய தூதரகம் ஆகிவற்றுடன் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தை மட்டக்களப்பில் நிறுவுவதற்கு 35 ஏக்கர் காணி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளபோதிலும், அதற்காக மேலும் 8 ஏக்கர் பரப்பு காணி, பலவந்தமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும், இதன்போது தங்கள் தரப்பினர் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய தங்களது நிறுவனத்தைக் கைப்பற்ற முடியாது என்றும், அதற்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயார் எனவும், அரசாங்கத்துடன் இணைந்தோ அல்லது அரசாங்கம் தங்களது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோ அதற்கமைய செயற்படவும் தாங்கள் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.