மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

(.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு கித்துள் பகுதியில் மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் வெள்ளிக்கிழமை(16)மாலை 4.00 மணியளவில்  மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் கித்துள் பகுதியில் உள்ள முந்தனையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த பிரதேசத்தில்  தொடர்ச்சியான மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளிக்கிழமை மாலை குறித்த ஆற்றுப்பகுதியின் ஓரத்தில் சுரங்கம் அகழ்ந்து மண் எடுத்துக்கொண்டிருக்கும்போது குறித்த மண் மேடு இடிந்துவீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய கரடியனாறு, இலுப்பட்டிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜசுந்தரம் சஜிந்தன்  20 வயது என்ற ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்க்கப்பட்டு தற்போது கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் அண்மைக்காலமாக மண் அகழ்வுகளினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுவரும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.குறிப்பாக சட்ட விரோத மண் அகழ்வுகளினால் அதிகளவான உயிர்கள் பறிபோகும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் முந்தனையாறு பகுதியில் தொடர்ச்சியான சட்ட விரோத மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருவது தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டன.

முந்தானையாற்றுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் காரணமாக இன்றுடன் இரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

இந்த சட்ட விரோத மண் அகழ்வுக்கு இளைஞர்களுக்கு பண ஆசை காட்டப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டு இவ்வாறான சட்ட விரோத மண் அகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருசில அனுமதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு பலநூறுக்கணக்கான அனுமதிப்பத்திரங்கள் பயன்படுத்துவது போன்று மண் கொள்ளைகள் நடைபெற்றுவருவதாகவும் இதனை அதிகாரிகள் கண்டும் காணதுபோன்று செயற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 05மணி தொடக்கம் இரவு 10.00மணி வரையில் குறித்த பகுதியில் மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முந்தனையாறு பகுதியில் தொடர்ச்சியான சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக குறித்த ஆற்றுப்பகுதி மோசமாக பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வினை தடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரும்போதே எதிர்காலத்தில் உயிரிழப்புகளை தடுக்கமுடியும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts