மன்னார் சதொச வளாகத்தினுள் மனிதப் புதைகுழி அகழ்வின்போது, ஊடகவியலாளர்கள் செல்வதற்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரமொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் டி.ஜே. பிரபாகரன் குறித்த தடையை இரத்து செய்துள்ளார்.
அதற்கமைய, மனிதப் புதைகுழி காணப்படக்கூடிய பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் பிரவேசித்து நிழற்படங்களை எடுக்கவும் ஔிப்பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மனிதப் புதைகுழி தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்கு கடந்த 3 நாட்களாக தடை ஏற்பட்டிருந்த நிலையில், மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களால் இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனிதப் புதைகுழி தொடர்பில் மேற்கொள்ளப்படும் புலனாய்விற்கு இடையூறு ஏற்படுவதாகத் தெரிவித்து, மாவட்ட நீதவானால் குறித்த வளாகத்திற்குள் பிரவேசிக்க கடந்த 8 ஆம் திகதி தடை விதிக்கப்பட்டது.
அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரிகளின் அனுமதியின்றி நிழற்படம் எடுத்தல், ஔிப்பதிவு செய்தல் மற்றும் அந்த பகுதிக்குள் நின்று கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் ஆகிய செயற்பாடுகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.
உள்நாடு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள பொறுப்பாளர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.