திருகோணமலையின் அபிவிருத்திக்காக முக்கிய திட்டங்கள் முன்னெடுப்பு – ஜனாதிபதி

திருகோணமலையின் அபிவிருத்திக்காக, அரசாங்கம் விரிவான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உருவச் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு  (வெள்ளிக்கிழமை) கந்தளாயில் இடம்பெற்றது. அங்கு சிலையைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “திருகோணமலை மாவட்டத்திலுள்ள குளங்களை புனரமைப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன் ஊடாக அதிகளவு குளங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எஞ்சியுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தி திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்களுக்கு அபிவிருத்தியின் பெறுபேறுகளை கிடைக்கச் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன்.

அத்தோடு வடமேல் மாகாணத்தின் பாரிய வாய்க்கால் நிர்மாணப் பணிகள் இம்மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் ஊடாக திருகோணமலை நகர மக்களுக்கு குடிநீர் பிரச்சினை மற்றும் பல்வேறு விவசாயத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

Related posts