மரணத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது.
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. 83 நாடுகளின் ஆதரவுடன் பிரேஸிலால் குறித்த யோசனை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் 121 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டிருந்ததுடன் 35 நாடுகள் இந்த யோசனைக்கு எதிராகவும், 31 நாடுகள் வாக்களிக்கவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்கள் மீண்டும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமைப் பெற்றுள்ள 193 நாடுகளில் 103 நாடுகளில் மரணத்தண்டனை தடைசெய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையில் 1976ஆம் ஆண்டுக்கு பிறகு மரணத்தண்டனை நிறைவேற்றப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.