தமிழீழ விடுதலை புலிகள் இயக்க மாவீரர்களில் ஒருவரான கரிகாலன் என்று அழைக்கப்படும் பாலமுரளியின் உடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுகின்ற வகையில் அவரின் மனைவி சர்மிளாதேவிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியால் சுய தொழில் முயற்சிக்காக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
கரிகாலனின் விதவை மனைவி சர்மிளாதேவி அவரின் குழந்தையுடன் மூளாய், காளி கோவிலடியில் மிகுந்த வறுமையில் வாழ்கின்றார். இவரின் கஷ்ட நிலை குறித்து அறிந்த ஜனநாயக போராளிகள் நேரில் சென்று விசாரித்து ஆறுதல் சொன்னார்கள்.
இவர் தையல் வேலைகளில் கை தேர்ந்தவராக இருப்பதால் இவரின் வாழ்வாதார மேம்பாட்டு சுய தொழில் முயற்சிக்காக தையல் இயந்திரம் ஒன்றை வழங்கி வைக்குமாறு ஜனநாயக போராளிகளிடம் இவர் கோரிக்கை விடுத்தார்.
இவரிடம் ஒரு தையல் இயந்திரம்கூட இல்லாத நிலையில் இவரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுகின்ற வகையில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தனால் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது.
மேலும் மிகுந்த கஷ்டத்தில் வாழ்கின்ற முன்னாள் போராளி ஒருவரின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காக 50000 ரூபாய் சகாய நிதியையும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் வழங்கி வைத்தார்.
இவ்வைபவங்களில் விசேட அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.