இன்றைய தினம் நாடு முழுவதிலும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் அதுபோல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மின்னல் தாக்கம் காரணமாக கிரிதலே முதலாம் கட்டை பகுதியில் ஒருவர் உயிரிழந்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் நேற்று மாலை கடும் மழைபெய்த நிலையில் இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் 64 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், திருகோணமலை மாவட்டத்திலும் நேற்று மாலை கடும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்போது திருகோணமலை சம்பூர் சூறைக்குடா பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் ஒருவர் பலியானார்.
43 வயதான மூதூர் 2ஐச் சேர்ந்த ஒருவரே பலியானதாக தெரிவிக்கப் படுகிறது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் மின்னல் தாக்கம் காரணமாக நேற்று மூன்று குடியிருப்புகள் சேதமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் பெய்யும் கடுமையான மழையின் காரணமாக, இராவண எல்ல நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹப்புத்தளை பகுதியில் ஏற்பட்ட கடும் மின்னல்தாக்கத்தினால், சில வீடுகளில் மின்சார சாதனங்கள் பாதிப்புற்றிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.