முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்கின்ற அடிப்படை உரிமை இலங்கையில் மீறப்படுகின்ற நிலைமை மூன்றாம் உலக யுத்தத்துக்கு காரணம் ஆகி விட கூடும் என்று அரசியல் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம். சி. ஆதம்பாவா தெரிவித்தார்.
இவரின் மாளிகைக்காடு அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து சம கால நடப்புகள் தொடர்பாக பேசியபோது சட்டத்தரணி ஆதம்பாவா மேலும் தெரிவித்தவை வருமாறு
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது குறித்து குரானில் எதுவும் சொல்லப்படவில் லை என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் பேசி இருக்கின்றார். அவர் குரானை முழுமையாக படித்தார் என்று சொல்லி இருக்கின்றார்.
குரானை அவர் படித்ததாக சொல்வது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அவரால் அர்த்தங்களை விளங்கி கொள்ள முடியாமல் போய் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்கின்ற ஒன்றை இல்லை என்று வேண்டும் என்று இட்டு கட்டி பேசி இருக்க வேண்டும்.
குரானில் குறைந்தது 10 இடங்களில் மிக தெளிவாக ஜனாஸாக்களின் நல்லடக்கம் தொடர்பாக சொல்லப்பட்டு இருக்கின்றது. இது தொடர்பாக குறித்த அமைச்சருக்கு பாடம் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அமைச்சரோடு இது தொடர்பாக எந்த இடத்திலும், எப்பொழுதும் நான் பகிரங்க விவாதம் மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.
ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுவதால் எந்த தீங்கும் நேர்ந்து விட போவதில்லை என்கிற விடயத்தில் உலக நாடுகள் ஒன்றுபட்டு நிற்க இலங்கை மாத்திரம் மாறுபட்டு நிற்கின்றது. இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கின்ற இந்த அடிப்படை உரிமைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், உலக சுகாதார ஸ்தாபனம், இஸ்லாமிய நாடுகள் என்று சர்வதேச சமூகமே இலங்கைக்கு எதிராக திரும்புகின்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது. மூன்றாம் உலக போருக்கு இது இட்டு செல்லுமா? என்கிற சந்தேகம்கூட ஏற்பட்டு உள்ளது