வறுமை கோட்டில் வாழ்கின்ற குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவின் காயன்குடா கிராம சேவகர் பிரிவிலே அடிப்படை வசதிகள் அற்று வறுமை கோட்டில் வாழ்கின்ற 04 குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று(28) நடைபெற்றது.
 
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் பிரித்தானியாவை தலமாக கொண்டு இயங்கும் ஹரோ அமைப்பின் நிதி பங்களிப்பில் ஒரு வீடு அமைக்கப்பட்டு அதற்கு பங்கார் இல்லம் எனவும்  பிரித்தானியாவிலே புலம்பெயர்ந்து வாழுகின்ற 03 நபர்களின் தனித்தனி உதவியூடாக முறையே சிவசக்தி இல்லம் ஆனந்தி இல்லம் ஜெயா இல்லம் என பெயரிடப்பட்ட இல்லங்களுக்கு தேவையான சகல வீட்டு தளபாடங்களுடன் கூடிய  வீடுகள் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வீடுகளை கையளித்தார்.
 
தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய அராங்க அதிபர்  ஏழை மக்களுக்கான முன்னேற்ற வழியை யார் காட்டுகின்றார்கள் எங்களது சமுதாயம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சமுதாயத்திலுள்ள அத்தனை பேரும் சிந்திக்க வேண்டும். நான் பல கிராமங்களுக்கும் செல்கின்றபொழுது அங்கு மக்கள் மனதிலே பல மாற்றங்கள் உணரப்படுவதை அவதானித்திருக்கின்றேன் சில இடங்களில் பலர் தாங்களாகவே முன்னேற்றப்பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
மீன்பிடி விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்ற பல பொருளாதார முன்னேற்றங்களிலே குறிப்பாக பெண்கள் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது. சிலர் வதந்திகளுக்குப் பின்னால் சென்று எமது எதிர்கால சந்ததிகளான இன்றைய இளந் தலைமுறையினரின் வாழ்வை நாம் சீரழித்து விடக் கூடாது. கல்விதான் நமது உயர்ந்த இலக்கை அடையக் கூடிய பெரியதொரு வளம். இதனை நாம் மறந்து செயற்பட்டுவிடக் கூடாது என்றார்.
 
இந்நிகழ்விலே மேலும் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வும் கடந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
 
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக சுகாதார வைத்திய அதிகாரி எம். ஸ்ரீநாத் கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஆங்கில பிரிவுக்கான தலைவர் கலாநிதி எஸ். உமாசங்கர் மாவட்ட தகவல் பிரிவு அதிகாரி வடிவேல் ஜீவானந்தம் ஏறாவூர் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பி. பெரேரா மேல்மருவத்தூர் ஆதிபராசக்திமன்ற இணைப்பாளர் எஸ். ஜீவமணி மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
 
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற தலைவர் கே. துரைராஜாவின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றது.

Related posts