கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது வளம் கொண்ட பிரதேசமாக வாகரை இருக்கின்ற போதிலும் அதிகஷ்ட பிரதேசமாகவே இன்றளவும் உள்ளது. இவ்வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதிக வருமானம் ஈட்டும் பிரதேசமாக மாற்றலாம் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இன்றைய தினம் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் வாகரைப் பிரதேமும் உள்ளது. ஆனாலும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பிரதேசமாகவே வாகரை தொடர்ந்தும் உள்ளது. இந்நிலையை மாற்றி அங்குள்ள வளங்களான கடல் வளம், மண்வளம், மற்றும் ஏனைய வளங்களை முறையாக பயன்படுத்தி இப்பிரதேச மக்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்பிரதேசம் சுற்றுலாத்துறைக்குரிய இடமாக மாற்றியமைக்க கூடியதாகவும் திகழ்கின்றது. இவ்வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதிக வருமானம் ஈட்டும் பிரதேசமாக மாற்றலாம் என்று தெரிவித்தார்.
வாகரை பிரதேச செயலாலளர் பரிவிற்குட்பட்ட சின்னத்தட்டுமுனை, ஊரியங்கட்டு ஆகிய பாடசாலை மாணவர்களுக்கும், கண்டலடி, புளியங்கண்டலடி, வம்மிவட்டுவான், நாகபுரம், மற்றும் பாற்சேனை ஆகிய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும், கதிரவெளி திலகவதியார் இல்ல மாணவர்களுக்குமாக சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கைத் தமிழரசு கட்சியின் வாகரை பிரதேசக் கிளைப் பொருளாளர் அலக்ஸ் நிரோசன் அவர்களின் வேண்டுகோளின் படி ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
அத்துடன் நிகழ்வின் பின்னராக பிரதேசத்தின் பல கிராமங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள இளைஞர்களைச் சந்தித்து அக்கிராமத்தில் உள்ள குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.