தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டதாக தெரிவித்து, 25 வயதான தமிழ் பெண் ஒருவரை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இரண்டு பேருக்கு 30 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை நேற்று வழங்கியது.
அனுராதபுரம் – தேவாநம்பியதிஸ்ஸபுர, நிராவிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 68 வயதுகளை உடைய இரண்டு பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த 3 குற்றங்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒரு குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வீதம் 30 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் தனித்தனியே நட்டயீட்டை செலுத்தவும், இதற்கு மேலதிகாக 4000 ரூபாய் வீதம் இருவரும் தனித்தனியே அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிட்டது.
குறித்த அபராதம் மற்றும் நட்டயீட்டை செலுத்த தவறினால் மேலும் 15 மாதங்களுக்கு சிறை தண்டனை அனுப்பவிக்க நேரும்.
இந்த தண்டனை அறிவிக்கப்படும் போது இரண்டாவது சந்தேகநபர் மன்றில் முன்னிலையாகி இருக்காத நிலையில், அவரை உடனடியாக கைது செய்யுமாறும் காவற்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி அல்லது அந்த காலப்பகுதியில் நிராவிய பிரதேசத்தில் வைத்து குறித்தப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கு பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றில் முன்னிலையாகாமல் விசாரணை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.