தென் பகுதி மீனவர்களுக்கு வட பகுதியில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்படுகின்றமையா? இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் முல்லைத்தீவில் மீனவர்களின் படகுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே விமல் வீரவங்ச இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
“இந்தியாவில் இருந்து இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன்பிடித்து செல்கின்றனர், அது தொடர்பில் எந்தவித எதிர்ப்பும் முன்வைக்கப்படுவதில்லை. ஆனால் சிலாபம், நீர்கொழும்பு மீனவர்கள் வடக்கில் மீன்பிடிக்க தடை ஏற்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு தென்பகுதி மீனவர்கள் அங்கு மீன்பிடிப்பதால் முல்லைத்தீவு மீனவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படபோவதில்லை. இனரீதியாக கடலை பிரிக்க முடியாது. இதனை கேட்க அரசாங்கம் ஒன்று இல்லையா? என விமல் கேள்வியெழுப்பினார்.
இதன்போது கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குறுக்கிட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்தநிலையில் குறுக்கிட்ட தேசிய கலந்துரையாடல்கள், அரசகரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன்,
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தென்பகுதி மீனவர்களுக்கு வடபகுதியில் மீன்பிடிக்க தடையில்லை.
ஆனால் அவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கே எதிர்பு தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக இனவாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். இனவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது“ என குறிப்பிட்டார்