40வருடகாலமாக நிலவும் அம்பாறை தமிழ்ப்பிரதேசங்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வுகண்டால் சஜித் சரித்திரபுருசராவார்.

அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களில் கடந்த நாற்பது வருடகாலமாக நிலவிவரும் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கவேண்டும். அவ்வாறு தீர்த்துவைத்தால் எமது தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழ்மக்கள் மத்தியில் சரித்திரபுருசராகத் திகழ்வார்.
 
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் திகாமடுல்ல மாவட்ட முக்கியஸ்தர்களுக்கான தேர்தலுக்கு முன்னரான மாவட்டச் சந்திப்பு நேற்று அம்பாறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
 
கட்சியின் கிழக்குமாகாணத்திற்கான தேர்தல்பொறுப்பு பிரதிநிதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹேந்திர திசாநாயக்க முன்னிலையில் மேற்படி மாவட்டமட்டச்சந்திப்பு இடம்பெற்றது.
 
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தயாரத்னா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜ.எம்.மன்சூர் சந்திரதாஸகலப்பதி வேட்பாளர்களான அப்துல்வாஸித் வி.வினோகாந்;த் கயான் முன்னாள் மாகாணசபைஉறுப்பினர் மஞ்சுளபெர்ணாண்டோ உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
அக்கூட்டத்தில் பிரமுகர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட்டது. அதன்போது ஒரேயொரு தமிழ்வேட்பாளரான வி.வினோகாந்த் அழகாக தனிச்சிங்களத்தில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப்பிரச்சனையை முன்வைத்து உரையாற்றினார். இவரது உரை பலராலும் பாராட்டப்பட்டது.
 
வேட்பாளர் வினோகாந்த் அங்கு கருத்துரைக்கையில்:
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் 90வீத தமிழ்மக்கள் எமது தலைவர் சஜித்பிரேமதாசவுக்கே வாக்களித்தனர். இன்றும் அம்மக்கள் சோர்ந்துபோகாமல் தலைவர் சஜித்தின்மீது நம்பிக்கைவைத்து பிரதமராக அழகுபார்க்க எண்ணுகின்றனர்.
எனவே அவரது பிரதிநிதியாக இங்குவருகை தந்திருக்கும் திரு. மஹேந்ர திசாநாயக்கவிடம் எமது மக்கள் சார்பில் இந்த குடிநீர் வேண்டுகோளை அன்பான வேண்டுகோளாக முன்வைக்கின்றேன்.
 
ஏனெனில் இப்பிரச்சினையைத்தீர்த்துவைக்கக்கூடிய திராணியும் அவரிடமே உண்டு என்பதை நானறிவேன். இதுவரை வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினையை தீர்க்கவில்லை.
 
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசெயலகப்பிரிவுகளில் தமிழ்மக்கள் செறிந்துவாழ்கிறார்கள். அங்கு குடிநீர்ப்பிரச்சினை காலாகாலமாக இருந்துவருகிறது.யாரும் தீர்ப்பாரில்லை.
குறிப்பாக குண்டுமடு செல்வபுரம் தாண்டியடி கண்ணகிகிராமம் மண்டானை காயத்திரிகிராமம் கோமாரி மல்லிகைத்தீவு மத்தியமுகாம் பெரியநீலாவணை போன்ற பிரதேச தமிழ்மக்கள் வரட்சிக்காலத்தில் குடிநீரின்றி சொல்லொணாக் கஸ்டத்தை அனுபவித்துவருகிறார்கள்.
 
இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கவேண்டுமென்பதே எனது வேண்டுகோள். என்றார்.
 
 

Related posts