மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டிற்காக ஆலையடிச்சோலை சேமக்காலை துப்பரவு

எதிர்வரும் 02ம் திகதி இடம்பெறவுள்ள மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டிற்காக மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலையை துப்பரவு செய்யும் பணிகள் தினம் மாநகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
 
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் மாநகரசபையின் சுகாதாரக் குழுவின் தலைவர் மாநகரசபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் ஒத்துழைப்புடன் மேற்படி சிரமதான நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
 
மிகவும் பற்றைக்காடுகள் நிறைந்த நிலையில் காணப்பட்ட இச் சேமக்காலையினை மேற்படி வழிபாட்டு நிகழ்விற்காக துப்பரவு செய்து தருமாறு பிரதேச தேவாலயங்களின் அருட்தந்தையர்களினாலும், பிரதேச மக்களினாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக மாநகரசபை உறுப்பினரால் மாநகரசபை முதல்வரின் வழிகாட்டலின் கீழ் மேற்படி துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இத் துப்பரவுப் பணியின் போது அருட்தந்தையர்களுடன் மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன் மற்றும் அந்தோனி கிருரஜன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
 
நவம்பர் 02ம் திகதி மரித்த விசுவாசிகளினுடைய தினமானது கத்தோலிக்க திருச்சபையினால் வருடாவருடம் அனுஷ்டிக்கப்படுகின்றது. எதிர்வரும் 2019.11.02ம் திகதி இவ்வனுஷ்டிப்பு நிகழ்வு புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலையிலும் இடம்பெறவுள்ளது. இத்தினத்தில் இறந்த அனைவரதும் நினைவாக திருப்பலிப்பூசைகள் மற்றும் வழிபாடுகள் என்பனவும் இச்சேமக்காலையிலேயே இடம்பெறும். இந்நிகழ்வில் மதகுருமார்களும், பெருமளவான மக்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts