ஐரோப்பியஒன்றிய தேர்தல் கண்காணிப்பக அதிகாரிகள் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப்பொதுச் செயலாளருக்கிடையில் சந்திப்பு…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பக அதிகாரிகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பொதுச் செயலாளரை இன்றைய தினம் மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பணிமனையில் சந்தித்தனர்.

 

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பக நீண்டகால கண்காணிப்பாளர்களான நினா வெஸ்ஸெல் மற்றும் பீட்டர் நொவொட்னி ஆகியோருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களுக்குமிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.

 

இதன்போது நாட்டின் அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், தேர்தல் கள நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

 

நாட்டில் உள்ள இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் பற்றியும், தீர்வு விடயத்தினை முன்நகர்த்திச் செல்வதற்காக மேற்கொள்ளாப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், தேர்தல் நிலைமைகளை சுமூகமாகக் கொண்டு செல்வதற்கும், அதனைத் தொடர்ந்து வரும் நாட்டின் தலைவரூடாக எமது மக்களின் உரிமை விடயங்களை நிலைநாட்டுவதற்கும் உரியவாறான தகுந்த செயற்பாடுகளை சர்வதேசத்தினூடாக எதிர்பார்ப்பதாகவும் பொதுச் செயலாளரால் இதன் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts